தாஜ்மஹாலில் பதிக்கப்பட்ட சலவைக்கற்கள் மஞ்சளாக மாறுகிறதா? அமைச்சர் விளக்கம்

tajmahalஉலக அதிசயங்களில் ஒன்றாகவும், 18ஆம் நூற்றாண்டின் நினைவுச் சின்னமாகவும் விளங்கி வரும் தாஜ்மஹால் மாசு காரணமாக மஞ்சள் நிறமாக மாறி வருவதாக எம்.பி.ஒருவர் நேற்று மாநிலங்களவையில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த  மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, ‘மாசு காரணமாக, தாஜ்மஹால் மஞ்சள் நிறமாக மாறவில்லை’ என்று எழுத்துபூர்வமான பதிலை அளித்தார்.

மேலும் அவர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: 18ஆம் நூற்றாண்டு நினைவுச் சின்னமான தாஜ்மஹால், மாசு காரணமாக மஞ்சள் நிறமாக மாறவில்லை. அதைப் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

தாஜ்மஹாலைச் சுற்றிலும் நிலவும் காற்றின் தன்மை, சுற்றுச்சூழல், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தாஜ்மஹாலின் மேல்பரப்பில் பதிக்கப்பட்டுள்ள சலவைக்கல்லில் ஏற்பட்டுள்ள மாசைக் குறைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தாஜ்மஹாலில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினர் மேற்கொண்டுவரும் பணிகளில் எந்த வெளிநாட்டைச் சேர்ந்த அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவில்லை” இவ்வாறு அவர் தன் பதிலில் கூறியுள்ளார்.

தாஜ்மஹாலின் அழகுக்கு முக்கிய காரணமே அதன் மேல்பரப்பில் பதிக்கப்பட்டிருக்கும் வெள்ளை நிற சலவைக்கல்தான். இந்த சலவைக்கல் அந்த பகுதியில் ஏற்பட்டிருக்கும் மாசு காரணமாக மஞ்சள் நிறமாக மாறி வருவதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply