shadow

anithaசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற செல்வி ஜெயலலிதா மிக விரைவில் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டாலும், அவர் ஆறு மாத காலத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெறவேண்டும். இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பலர் ஜெயலலிதாவுக்காக தங்கள் எம்.எல்.ஏ பதவியை இழக்க தயாராக இருக்கும் நிலையில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவுக்காக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், பின்னர் கட்சி தலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2009ல் திமுகவில் இணைந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக பிரபலம் பெரியசாமியின் ஆதரவாளர்களுக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி மோதல் நடந்து வந்ததால் அனிதா ராதாகிருஷ்ணன் சில மாதங்களாக விரக்தியில் உள்ளார் என கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனிதா ராதாகிருஷ்ணன், “என்னை உருவாக்கிய கட்சியின் தலைவராக இருக்கிற அம்மா, வழக்கிலிருந்து விடுதலை ஆகியிருப்பது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுவது சம்மந்தமாக அம்மா யோசித்து வருவதாக சொல்றாங்க.

அப்படி முடிவு செய்தால் நான் இப்பவே தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருக்கிற பதவியை ராஜினமா செய்ய தயாராக இருக்கிறேன். எனது ஆசையை அம்மா நிறைவேற்றினால் அ.தி.மு.கவில் இணைந்து கட்சிக்காக உழைக்க தயாராக இருக்கிறேன். அல்லது அரசியலை விட்டு விலகி இருக்க முடிவு செய்திருக்கிறேன். நான் இப்போதிலிருந்து தி.மு.கவில் இல்லை. அந்த கட்சியின் தலைமை, பெரியசாமி என்ற ஒருவரை நம்பி, என்னைப்போன்று உழைத்தவர்களை இழந்திருக்கிறது அவ்வளவுதான்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply