இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் கனமழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகித்தது. நான்காவது போட்டி, ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க (ஜே.எஸ்.சி.ஏ.,) சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்தது.

இந்திய அணியில் இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டார். இவர்களுக்கு பதிலாக முகமது ஷமி, ஜெயதேவ் உனத்கத் இடம் பிடித்தனர். “டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, “பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்தது. பால்க்னர் (23), மெக்கே (7) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் முகமது ஷமி 3, வினய் குமார், அஷ்வின் தலா 2, ரவிந்திர ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இந்திய அணி 4.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. தவான் (14), ரோகித் (9) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டி ரத்தானது. இதன்மூலம் இந்திய அணி 1-2 என ஒருநாள் தொடரில் பின்தங்கி உள்ளது. ஐந்தாவது போட்டி கட்டாக்கில் வரும் அக., 26ம் தேதி நடக்கிறது.

நான்காவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டதால், இந்திய அணி தொடரை கைப்பற்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது 1-2 என பின்தங்கி உள்ள இந்திய அணி, தொடரை வெல்ல மீதமுள்ள மூன்று போட்டியிலும் (அக்., 26, 30, நவ., 2) வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டின் முக்கிய நகரங்களில் மழை பெய்து வருவதால், மீதமுள்ள மூன்று போட்டியில் (கட்டாக், நாக்பூர், பெங்களூரு) ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டால் கூட தொடரை இழக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply