ஏற்காடு இடைத்தேர்தல் கடந்த 4ம் தேதி நடந்தது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகிறது. 14 மேஜைகளில் 21 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிவு காலை 11 மணியளவில் தெரிந்து விடும்.  தேர்தலில் 89.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையமான கல்லூரியின் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன. அங்கு தற்போது துணை ராணுவப்படையை சேர்ந்த 186 பேரும், தமிழக போலீசார் அடங்கிய குழுவினரும் என 3 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்கு எண்ணும் மையம் 24 மணி நேரமும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல் பார்வையாளர் ரவி பிரகாஷ் அரோரா, மாவட்ட தேர்தல் அலுவலர் மகரபூஷணம், தொகுதி தேர்தல் அலுவலர் சபாபதி ஆகியோர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகள் 14 மேஜைகளிலும், 21வது சுற்று 10 மேஜைகளிலும் நடத்தப்படுகிறது. ஒரு மேஜைக்கு ஒரு நுண்பார்வையாளர், ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் என 3 பேர் பணியில் இருப்பர்.

பதிவாகியுள்ள 179 தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்படுகின்றன. இதை தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒவ்வொரு டேபிளாக கொடுக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி துவங்கும். ஒவ்வொரு சுற்றும் சுமார் 15ல் இருந்து 20 நிமிடங்கள் வரை நீடிக்கும். நண்பகல் 12 மணியளவில் அதிகாரபூர்வமாக முடிவுகள் வெளியிடப்படும்.

தேர்தல் அலுவலர் சபாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் 42 அலுவலர்களும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் காலை 6 மணிக்கு அடையாள அட்டையுடன் வர வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில், செல்போன், பேனா போன்ற சாதனங்களை எடுத்து வரக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply