“எனக்கு வேண்டாம்‬”-என்று சொன்ன வாயு மைந்தன்

mubai-whisper_2352865k
பட்டாபிஷேகம் முடிந்தது. ராமரும் சீதையும் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். பக்கத்தில் இருந்த அனுமனைப் பார்த்து சீதாப்பிராட்டிக்கு வாஞ்சை பிறந்தது. ‘இந்த வானரந்தான் நம் மீது எவ்வளவு பாசமாக இருக்கிறது’ என்று நினைத்துப் பிராட்டியின் மனம் நெகிழ்ந்தது.
தன் கழுத்திலிருந்த முத்து மாலையைக் கழற்றி அனுமனின் கழுத்தில் போட்டார் சீதாப்பிராட்டி.
அனுமன் அந்த மாலையைக் கழற்றினான். முத்து மாலையை முகர்ந்து பார்த்தான். அதைப் பார்த்த சீதையின் முகத்திலும் குழப்பத்தின் ரேகைகள் தோன்றின.
அனுமன் அந்த மாலையைக் காதில் வைத்துப் பார்த்தான். சீதையின் குழப்பம் அதிகரித்தது. இருந்தாலும் இந்த வானரம் என்னதான் செய்கிறது என்று பார்த்துவிடலாம் என்று பொறுமையாக இருந்தார்.
அடுத்த நொடி அந்த மாலையைத் தூக்கி தூரத்தில் வைத்துவிட்டு தேமே என்று இருந்தான் அனுமன்.
சீதையின் முகத்தில் கசப்பு. ‘என்ன இருந்தாலும் குரங்குதானே. புத்தி அப்படித்தானே இருக்கும்’ என்று நினைத்துக்கொண்டார்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ராமபிரானின் முகத்தில் புன்னகை.
அவர் அனுமனை அருகில் அழைத்தார். அவன் உடலிலிருந்து ஒரு ரோமத்தைக் கிள்ளி எடுத்தார். அதைச் சீதையின் காதுக்கு அருகில் கொண்டுசென்றார். சீதையின் முகத்தில் ஆச்சரியம். அந்த ரோமத்திலிருந்து “ராம், ராம்” என்னும் ஜபம் கேட்டது. மீண்டும் உற்றுக் கேட்டார் சீதாப்பிராட்டி. மேலும் துல்லியமாக ராம நாமம் கேட்டது.
அனுமனின் காரியத்தின் பொருளும் மாலையை அவன் தூக்கிப் போட்ட காரணமும் சீதாவுக்குப் புரிந்தது. குற்ற உணர்ச்சியுடன் ராமரையும் அனுமனையும் பார்த்தார். தனது பக்தியை விட அனுமனின் ராம பக்தி சிறந்தது என்பதை சீதா உணர்ந்தார்.
அனுமன் இவை எதையுமே கவனிக்காமல் ராமரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

Leave a Reply