நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராக பணிபுரிபவர் தேவயானி கோப்ரகடே. அவர் தனது அலுவலகத்தில் வேலை செய்த நபருக்கு விசா கேட்டு விண்ணப்பித்ததில் முறைகேடான ஆவணங்களை சமர்ப்பித்தாக கூறி நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் வேலைக்குரிய ஊதியம் வழங்காமல் குறைவான ஊதியம் வழங்குவது சட்டப்படி குற்றமாகும். தேவயானி தனது வீட்டில் வேலை செய்வதற்காக தேர்ந்தெடுத்த நபருக்கு விசா கேட்டு அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தார்.  அதில் தவறான தகவல்களையும், முறைகேடான ஆவணங்களையும் அளித்துள்ளதாக, மென்ஹட்டன் நகரின் பெடரல் வழக்கறிஞர் ப்ரீத் பஹாரா குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறு தவறான ஆவணங்களை சமர்பித்த குற்றத்திற்காக தனது மகளை பள்ளியில் விட்டுச்செல்ல துணை தூதர் காரில் வந்தபோது பொதுமக்கள் முன்னிலையில் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவரது கைது குறித்து அமெரிக்க அரசுக்கு இந்திய அரசு தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது. அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தான் தவறேதும் செய்யவில்லை என நீதிபதியிடம் கூறினார். அதை தொடர்ந்து நீதிபதி தனது தீர்ப்பில் 2.5 லட்சம் அமெரிக்க டாலரை பிணைத்தொகையாக செலுத்துமாறு உத்தரவிட்டார். பின்னர் இத்தொகையை நீதிமன்றத்தில் செலுத்தி துணைத் தூதர் தேவயானி விடுதலையானார்.

Leave a Reply