மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 17 ஆம் தேதி 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சுவற்றில் தலையை மோதி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. மோகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதி, சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பெண்ணின் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவரின் மகள் பிரியா (வயது 23) என்றும், அவரது காதல் கணவர் மணிமாதவன் (27) என்பவரே கொலை செய்ததும் தெரியவந்தது.

எனவே அவரை கைது செய்ய திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் நீலகண்டன், பழனிச்சாமி உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று திருவாரூர் சென்ற தனிப்படை போலீசார் அங்கு ஒரு இடத்தில் பதுங்கி இருந்த மணிமாதவனை கைது செய்து மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர்.

போலீசாரிடம் மணிமாதவன் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, நான் பொள்ளாச்சி அருகே வால்பாறையில் உள்ள ஒரு எஸ்டேட்டில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்தேன். அப்போது பிரியாவும் அங்கு வேலைக்கு சேர்ந்தார். பக்கத்து ஊரை சேர்ந்தவன் என்பதால் என்னிடம் அன்பாக பேசி பழகினாள். இதுவே எங்களுக்குள் காதலாக மாறியது. பின்னர் நாங்கள் இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். பின்னர் கர்ப்பமான பிரியா, என்னை கேட்காமலேயே கருவை கலைத்தாள்.

இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. என்னை விட்டு அவள் பிரிந்து சென்று விட்டாள். பின்னர் நான் மட்டும் அந்த எஸ்டேட்டில் வேலை செய்துவந்தேன். அவளது நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரித்தபோது அவளுக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் நடந்து 2 வயதில் பெண் குழந்தை உள்ளது என தெரிந்தது. இரண்டாவதாக என்னை ஏமாற்றி காதல் திருமணம் செய்ய வைத்தாள். நம்பிக்கை மோசம் செய்த அவளை பழிவாங்க முடிவு செய்தேன்.

அவள் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிவது தெரியவந்தது. அங்கு மனோஜ் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தகவலும் எனக்கு தெரிந்ததால் மேலும் கோபமடைந்தேன். என்னிடம் உள்ள பணம், நகை ஆகியவற்றை பறித்த அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்து சென்னைக்கு சென்றேன்.

அங்கு வளசரவாக்கத்தில் லாரி கிளீனராக வேலைக்கு சேர்ந்தேன். பிறகு வடபழனியில் உள்ள பிரியாவுடன் அடிக்கடி செல்போனில் பேசி பழைய உறவை புதுப்பித்தேன். பின்னர் அவளிடம் மாமல்லபுரம் சுற்றிப்பார்க்க போகலாம் என ஆசைவார்த்தை கூறி அழைத்து வந்தேன்.

இங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்தோம். பின்னர் நேரம் பார்த்து சுவற்றில் அவளது தலையை மோதி கொலை செய்தேன் என்று வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply