shadow

goldங்கத்தின் விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது. அதாவது ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 2570 ஆக குறைந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை  சுமார்  200 ரூபாய் குறைந்துள்ளது.

உலக அளவில் தங்கத்தை அதிகமாக  வாங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், தங்கத்தின் மீதான இந்தியர்களின் மோகம் குறையத் தொடங்கி உள்ளதையே இந்த விலை வீழ்ச்சி உணர்த்துவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஒராண்டு காலமாகவே தங்கத்தின் விலையில் ஒருவிதமான தேக்க நிலை நிலவுகிறது. அதே நேரத்தில் கடந்த ஒராண்டாக  இந்திய பங்குச் சந்தையின் வளர்ச்சியானது அதிகமாகி உள்ளது. எனவே, மக்களின் கவனம் முழுவதும் பங்குச் சந்தையில் மீது திரும்பி உள்ளது. தங்கத்தில் செய்துள்ள முதலீடுகளை பங்குச் சந்தைக்கு கொண்டு செல்வதற்கு மக்கள் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள். பங்குச் சந்தையும் குறிப்பிட்ட அளவு வருமானம் கொடுத்து வருகிறது.

தங்கம் வாங்குவதற்கான ஆர்வத்தை மக்கள் குறைத்து வருகிறார்கள். மேலும் கடந்த சில மாதங்களாக உலக நாடுகளில் நிலவும் சூழ்நிலைகள் தங்கத்துக்கு எதிராக உள்ளது. அதாவது ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரச்னையினால் கையிருப்பு தங்கத்தை விற்பனை செய்து வருகிறார்கள். இதனாலும் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது.மேலும் தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு வலிமையாக உள்ளதும் தங்கத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.

தங்கம் சிறந்த சொத்தாக இருந்தாலும் அது வருமானம் ஈட்டக்கூடிய சொத்து இல்லை. அதாவது தங்கத்தின் விலை ஏறினால் மட்டும்தான் தங்கத்தை விற்பனை செய்து லாபம் பார்க்க முடியும். மற்ற நேரங்களில் அது எந்த விதமான வருமானமும் ஈட்டி தராது.  அதுவே பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் டிவிடெண்ட் கிடைக்கும். அதேபோல பணத்தை வங்கி ஃபிக்ஸ்ட் டெபாசிட்டில் போட்டு வைத்திருந்தால் அதற்கு வட்டி கிடைக்கும். தங்கத்தில் இது போன்ற எந்தவிதமான வருமானமும் கிடைக்காது.

இந்தியாவில் தங்கத்தை அழகு பொருளாகவும், அந்தஸ்தாகவும் மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் தற்போது  இந்த நிலை சற்று மாறி வருகிறது. தங்கத்தினால் என்ன லாபம் கிடைக்கும் எனப் பார்க்கிறார்கள். எனவே  திருமணம், பரிசளிப்பு போன்றவற்றிற்கு மட்டுமே தங்கத்தை வாங்குகிறார்கள்.

மேலும் தங்கத்தில் பாதுகாப்பு என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. அதாவது தங்க கொள்ளை குறித்த செய்திகள் தினமும் வெளிவந்துக் கொண்டே இருக்கிறது. தங்கத்தை தைரியமாக வெளியில் அணிந்துச் செல்லவும் முடியவில்லை. அதே நேரத்தில் வீட்டு வைக்க வைக்கவும் முடியவில்லை. இதனால் கொள்ளை சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. தங்கத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லாதது இதற்கு ஒரு காரணம். எனவே தங்க வாங்குவதை தவிர்த்து பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்ய தயாராகி வருகிறார்கள்.

தங்கத்தின் விலை அடுத்த ஆறுமாதத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து மும்பையைச் சேர்ந்த காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம். ” தங்கத்தின் விலை இன்னும் வீழ்ச்சியடை அதிக வாய்ப்பு உள்ளது.. ஏனெனில் பங்குச் சந்தையின் வளர்ச்சி மற்றும் டாலரின் மதிப்பு வலிமையாக உள்ளதால் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலையாது 25 ஆயிரம் ரூபாய் வரை இறங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. உடனடியாக விலை உயருவதற்கு வாய்ப்பு இல்லை. அடுத்த ஆறுமாதத்தில் அதிகபட்சம் 27,500 லிருந்து 28,000 ரூபாய் வரை செல்வதற்கு வாய்ப்புள்ளது” என்றார்.

எனவே முதலீடு நோக்கில் தங்கம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. திருமணம் மற்றும் வேறு தேவைகள் இருப்பவர்கள் தேவை எனில் தங்கம் வாங்கலாம்.

Leave a Reply