ஹாலிவுட், பாலிவுட் பாணியில் கோலிவுட் சினிமாவும் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. ஹாலிவுட்டில் தயாராகும் சினிமாக்கள் அனைத்தும் இன்ஷூரன்ஸ் செய்யப்படுவது போல, ரஜினி நடிக்கும் 2.0 சினிமாவும் ரூ.330 கோடிக்கு இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.
சமீப காலமாக இந்தியில் பல திரைப்படங்கள் இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டு வருகின்றன. அமீர்கான் நடித்த ‘பிகே’ படம் ரூ.300 கோடிக்கு இன்ஷுரன்ஸ் செய்யப்பட்டது. சல்மான்கான் நடித்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படம் ரூ.150 கோடிக்கும், ஷாருக்கான் நடித்த ‘தில்வாலே’, அக்ஷய்குமார் நடித்த ‘ஏர்லிப்ட்’ தலா ரூ.100 கோடிக்கும் இன்ஷுரன்ஸ் செய்யப்பட்டது. இந்த பாணியில் இப்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 2.0 படத்துக்கு ரூ.330 கோடிக்கு இன்ஷுரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்ஷுரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் இந்தப் படத்துக்கு இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் டிவிஷனல் மேனேஜர் கேசவனிடம் கேட்டோம். “தமிழ் சினிமாவைவிட இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களை அதிகளவில் இன்ஷூரன்ஸ் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இது குறித்து விழிப்புஉணர்வு இப்போதுதான் உருவாகியுள்ளது. சினிமாவில் இன்ஷுரன்ஸை பொறுத்தவரை, நான்கு வகையான பாலிசிகளை வழங்குகிறோம்.
படப்பிடிப்பு தொடங்குவதற்குமுன் நடிகர், நடிகை, இசையமைப்பாளர் போன்ற முக்கிய நபர்களுக்கு அட்வான்ஸுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தருகிறோம். இந்த பாலிசி திரைப்படம் தொடங்குவதற்குமுன் வரை பொருந்தும். அடுத்து, சினிமா படப்பிடிப்பு முதல் நாள் தொடங்கி, படம் வெளியாகும் நாள் வரை. அதாவது, முதல் காப்பி வெளிவரும் நாள் வரையிலான இன்ஷூரன்ஸ் பாலிசி. இதில் நடிகர், நடிகை, முக்கிய துணை நடிகர்கள், இயக்குநர் போன்ற முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.மூன்றாவதாக, சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கான கவரேஜ் மற்றும் அந்த சினிமாவில் பணிபுரியும் துணை நடிகர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீடு பாலிசி.
நான்காவதாக, சினிமா ஷூட்டிங் ரத்தானால், அதற்கான பாலிசி. சினிமா ஷூட்டிங் ரத்து என்பது அந்த சினிமாவில் நடிக்கும் முக்கிய நடிகரோ, நடிகையோ சினிமா படப்பிடிப்பில் பங்கு பெறமுடியாத பட்சத்தில் படப்பிடிப்பு ரத்தானால் அதற்கான இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும். இதில் மிக முக்கியமாக, எதற்காக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது என்பதைப் பொறுத்தே இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் வழங்கப்படும். நடிகருக்கு உடல்நிலை சரியில்லை, விமானம் தாமதம், மழையால் படப்பிடிப்பு பாதிப்பு போன்றவை இந்த பாலிசியில் அடங்கும்.
இந்த நான்கு பாலிசிகளையும் ரஜினி நடிக்கும் 2.0 படத்துக்கு எடுத்துள்ளனர். ரஜினி உள்பட எல்லா நடிகர்களுக்கும் இன்ஷூரன்ஸ் செய்துள்ளனர்’’ என்றார்.
இது குறித்து அலையன்ஸ் இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் துணைத் தலைவர் அபிஷேக் பாரதியிடம் பேசினோம்.
“ஹாலிவுட்டில் முதலில் செய்வது படத்துக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பதுதான். அவதார் படத்துக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டது. இந்தி சினிமாவில் ஷாருக்கான், சல்மான்கான் திரைப்படத்தில் நடிக்க அட்வான்ஸ் கொடுத்த நாளிலேயே இன்ஷூரன்ஸ் செய்துவிடுகின்றனர் தயாரிப்பாளர்கள். அண்மையில் பாகுபலி படத்துக்கு இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்தின்போது எதிர்பாராத மழை காரணமாக சினிமா படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதற்காக ரூ.31 லட்சம் க்ளெய்ம் கோரினார்கள். அந்தத் தொகையை நாங்கள் தந்தோம்.
ரஜினியின் 2.0 படத்துக்கு பணிபுரிவதற்காக வெளிநாட்டில் இருந்து வந்த சண்டைக் காட்சி கலைஞர்கள் வந்தவுடனே கேட்ட முதல் கேள்வி, உங்கள் படத்துக்கு இன்ஷூரன்ஸ் செய்துள்ளீர்களா என்பதுதான். அதற்கடுத்து, எங்களுக்கு இன்ஷூரன்ஸ் உள்ளதா என்று கேட்டார்கள்.
தயாரிப்பாளர்கள் படம் எடுப்பதற்கு பட்ஜெட்டின் ஒரு பகுதியாக இன்ஷூரன்ஸை கருத வேண்டும். ஒரு படம் வெளியான பிறகு வெற்றி, தோல்வி என்பது சகஜம். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் படம் வெளியாகாமல் போனால், அதனால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க இன்ஷூரன்ஸ் செய்வது அவசியம்” என்றார்.
இந்த பாலிசியை பெற எவ்வளவு பிரிமீயம் என்கிற கேள்வியை இருவரிடமும் கேட்டோம். ‘‘அது கான்ஃபிடென்ஷியல். தயாரிப்பாளரிடம் கேளுங்கள்’’ என்று சொல்லிவிட்டார்கள்.
ஏதோ ஒரு காரணத்துக்காக தாங்கள் தயாரிக்கும் படம் வராமல் போய்விடுமோ என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள் இன்ஷூரன்ஸ் பற்றி யோசிக்க ஆரம்பித்திருப்பது பாசிட்டிவ்-ஆன விஷயம்தான்!