ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும?

ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும?

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்தியனின் அத்தியாவசிய தேவை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. மேலும் ஆதார் அட்டையுடன் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்த அளவிற்கு முக்கியமான ஆதார் அட்டை ஒருவேளை தொலைந்துவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து தற்போது பார்ப்போம். ஆதார் அட்டையில் மிகவும் முக்கியமானது ஆதார் எண் அல்லது பதிவு எண்(Enrollment number) தான். அதனால், இப்போதே உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் எண்ணை பத்திரமாக எங்கேயாவது குறித்து வைத்துக்கொள்ளவும். ஒரு வேளை ஆதார் எண் நினைவில் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆதார் வாங்குவதற்காகக் கொடுத்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தெரிந்தால் போதும். அவற்றை வைத்து ஆதார் எண்ணை மீட்டெடுக்கலாம்.

முதலில், ஆதார் இணையதளத்தை புக்மார்க் செய்துகொள்ளுங்கள். www.uidai.gov.in

காணாமல் போன ஆதார் கார்டுக்குப் பதிலாக டூப்ளிகேட் பிரின்ட் எடுக்க நினைப்பவர்கள் “Retrieve Lost UID/EID” என்ற லிங்கினை க்ளிக் செய்யவும். அந்தப் பக்கத்தில் உங்களுக்கு வேண்டியது ஆதார் எண்ணா அல்லது பதிவு எண்ணா என்பதைக் குறிப்பிட வேண்டும். பின் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றைக் குறிப்பிடவும். ஆதார் வாங்கும்போது கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணைத்தான் இங்கேயும் குறிப்பிட வேண்டும். அந்த மொபைல் எண்ணுக்கு வரும் OTPஐ அடுத்த பகுதியில் குறிப்பிட வேண்டும்.

பொதுவாகவே, ஆதார் எண் தொடர்பான பிராசஸில் OTP உடனே வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனவே, 15 நிமிடங்கள் வரை பொறுமையாக இருக்கவும். அதன் பின்னும் OTP வரவில்லையென்றால் மட்டுமே மீண்டும் சப்மிட் கொடுக்கவும்.

OTP-யை சரிபார்க்கும் சிஸ்டம், அந்த எண் சரியாக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணுக்கு உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு எண்ணை அனுப்பி வைக்கும். அந்த எண்ணை வைத்து பிரின்ட் எடுத்துக் கொள்ளலாம். மொபைல் எண்ணுக்கு ஆதார் எண்ணை அனுப்பியிருப்பதாக வரும் செய்திக்கு கீழே, ஆதார் பிரின்ட் எடுக்க உதவும் லின்க் இருக்கும். ”Download Aadhaar” என்ற அந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

அந்தப் பக்கத்தில் ஆதார் எண், பதிவு எண்(Enrollment number),முழுப் பெயர், பின் கோடு, மொபைல் எண் ஆகியவற்றை கொடுக்கவும். மீண்டும் ஒரு OTP மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதையும் என்டர் செய்தால், டவுன்லோடு லிங்க் கிடைக்கும். டவுன்லோடு ஆதார் கார்டு, பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்ட PDF formல் இருக்கும். உங்கள் பின்கோடுதான் அதன் பாஸ்வேர்டு.

மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை சிலருக்குத் தவறு என மெஸெஜ் கூட வரலாம். அவர்கள் ”Verify Email/ Mobile Number” என்ற லிங்கில் சென்று அவற்றை சரிப்பார்த்துக் கொள்ளலாம். ஆதார் கார்டு டூப்ளிகேட் என இதைச் சொன்னாலும், உண்மையில் அது டூப்ளிகேட் அல்ல. ஆதார் எண்தான் முக்கியம். அதை எத்தனை முறை பிரின்ட் எடுத்தாலும் அது ஒரிஜினல்தான்.

 

Leave a Reply