காதுக் குடுமியை அகற்றுவது எப்படி? இப்படிக் கேட்பவர்கள் பலர், குப்பை வாளிக்குள் (Dustbin) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

உண்மையில் காதுக் குடுமி என்பது காதையும் செவிப்பறையையும் பாதுகாப்பதற்காக எமது உடல் தானாகவே உற்பத்தி செய்யும் பாதுகாப்புக் கவசம் போன்றது.

பொதுவாக இது ஒரு மென்படலம் போல காதுக் குழாயின் சுவரின் தோலில் படிந்திருக்கும். இதனால் கிருமிகள், சிறுகாயங்கள், நீர் போன்றவவை காதைத் தாக்காது பாதுகாக்கிறது.

அத்துடன் காதை ஈரலிப்பாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது. அதிலுள்ள கிருமியெதிர்ப்பு (antibacterial properties) பண்பானது வெளிக் கிருமிகள் தொற்றி, காதின் உட்புறத்தில் நோயை ஏற்படுத்துவதையும் தடுக்கிறது.

காதுக்குடுமி (Cerumen) என்பது இயல்பாக எண்ணெய்த் தன்மை உள்ள ஒரு திரவமாகும். சருமத்தில் உள்ள சில சுரப்பிகளால் (Sebaceous and Ceruminous glands) சுரக்கப்படுகிறது.

ஒவ்வொருவரது உடல் நிலைக்கும் ஏற்ப இது நீர்த்தன்மையாகவோ, திடமான கட்டியாகவோ இருக்கக் கூடும்.

காதின் சுவரிலிருந்து உதிரும் சருமத் துகள்கள், முடித் துண்டுகள், ஆகியவற்றுடன் கலந்து திடப் பொருளாக மாற்றமுறும்.

காதுக்குடுமி காதின் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்பதால் வலிமையாக எவரும் அதனை அகற்ற வேண்டியதில்லை. தினமும் புதிது புதிதாக உற்பத்தியாகி வர பழையது தானாகவே சிறிது சிறிதாக வெளியேறிவிடும்.

மென்மையான குடுமியானது முகம் கழுவும் அல்லது குளிக்கும் நீருடன் கலந்து வெளியேறிவிடும். அல்லது காய்ந்து உதிர்ந்துவிடும். சிலருக்கு, பல்வேறு காரணங்களால் வெளியேறாது உள்ளேயே தங்கி இறுகி விடுவதுண்டு.

காதுக்குழாய் ஒடுங்கலாக இருப்பதும் சற்று வளைந்து இருப்பதும் காரணமாகலாம். சிலருக்கு அது இறுகி, கட்டியாகி வெளியேற மறுப்பதுண்டு. அது அதிகமாகி செவிக்குழாயின் விட்டத்தின் 80 சதவிகிதத்ததை அடைத்துக்கொண்டால் காது கேட்பது மந்தமாகும். ஒரு சிலருக்கு வலி ஏற்படலாம். வேறு சிலருக்கு கிருமித் தொற்றும் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

Leave a Reply