மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி அருகே சைக்கிள் வெடிகுண்டு ஒன்று பயங்கரமாக வெடித்ததால் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி என்ற இடத்தில் நேற்று இரவு 7 மணியளவில் புனித பால் பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் ஒன்றில் இருந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அந்த நேரத்தில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்களில் ஏழு பேர் உடல்சிதறி பரிதாபமாக பலியாகினர். 6 பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை எனினும் 1993ஆம் ஆண்டுமுதல் தனிமாநிலம் கேட்டு போராடி வரும் KLO (Kamtapur Liberation Organisation) என்ற அமைப்பின் சதியாக இருக்கலாம் என மேற்குவங்க போலீஸார் சந்தேகம் கொள்கின்றனர்.

மேற்குவங்க அமைச்சர் கெளதம் தப் இன்று செய்தியாளர்களிடம் ‘இது ஒரு கோழைத்தனமான செயல். குண்டுவெடிப்பு காரணமானோர் யாராக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குண்டுவெடிப்பில் இறந்த ஐந்து பேர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்கள் பெயர் லால்மோகன் தேப்நாத், அஞ்சன் ராய், பாப்பு ரஹ்மான், ரஷிதுல் இஸ்லாம், மற்றும் அர்னிஷ் ஹுசைன் என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீசார் தீவிரவிசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply