இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முகமது ஷமியின் அபார பந்துவீச்சில், 234 ரன்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் சுருண்டது.  இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் இதுவரையில் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் 200வது டெஸ்ட் போட்டியுடன், கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.

அவரது, 200வது டெஸ்ட் போட்டி தாய் மண்ணிலேயே நடைபெற வேண்டும் என்பதற்காகவே, வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. சச்சினின் 199வது போட்டி என்பதால், அவரது ஆட்டத்தை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கெயில், பொவெல் களம் இறங்கினர். கெயில் 18 ரன் எடுத்திருந்தபோது, புவனேஷ்குமார் பந்தை தூக்கியடிக்க முயன்று, முரளி விஜயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக முகமது ஷமியின் பந்தில், பொவெல் 28 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சாமுவேலும், பிராவோவும் நிதானமாக ஆடி வந்த நிலையில், ஷமியின் பந்தில், சாமுவேல் கிளீன் போல்டானார். அப்போது அவர் 65 ரன் எடுத்திருந்தார். அடுத்த ஓவரிலேயே பிராவோ 23 ரன்னில் ரன் அவுட் ஆனார். பின்னால் வந்தவர்களில் சந்தர்பால் மட்டும் சற்று நின்று விளையாடி 35 ரன் சேர்த்தார். ஆனால், அவரும், அஸ்வின் பந்தில் போல்டானார். பின்வரிசை வீரர்கள் அனைவரும் அதிகபட்சமாக 16 ரன்களுக்கு உள்ளாகவே அவுட் ஆகி வெளியேறினர்.

ராம்டின், ஷில்லிங்போர்ட் ஆகியோர் ஒற்றை இலக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர். கார்ட்டிரெல் டக்அவுட் ஆனார். 78 ஓவர்களிலேயே, வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 234 ரன் எடுத்தது. இந்திய தரப்பில் முகமது ஷமி அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 2 விக்கெட்டையும், புவனேஷ்குமார், ஓஜா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அடுத்ததாக, இந்தியா தனது இன்னிங்சை தொடங்கியது. ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.  நேற்றைய ஆட்ட நேர இறுதியில் 12 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 37 ரன் எடுத்திருந்தது. ஷிகர் தவான் 21 ரன்னுடனும், முரளி விஜய் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Leave a Reply