shadow

இந்த வார ராசிபலன்

மேஷம்
எதிர்பார்ப்புகள் இல்லாமல் எதையும் செய்பவர்களே! சுக்ரனும், சூரியனும் சாதகமாக இருப்பதால் உங்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் நீங்கும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். வீடு கட்டத் தொடங்குவீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். அவருக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். வழக்கு சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு. 8-ல் நிற்கும் சனியுடன் ராசிநாதன் செவ்வாய் இணைந்திருப்பதால் எதிலும் ஒருவித சலிப்பு, சோர்வு, தலைச்சுற்றல், இரத்த அழுத்தம் வந்துப் போகும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் நல்ல வாய்ப்புகள் வரும். புதிய திட்டங்கள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 7, 10 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா அதிஷ்ட திசை: தென்மேற்கு

ரிஷபம்
ஒளிவு மறைவில்லாமல் பேசுபவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வி.ஐ.பியின் நட்பு கிடைக்கும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. தோழியிடம் எதிர்பார்த்த பண உதவி கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பூர்வீகச் சொத்தில் கூடுதலாக செலவு செய்து அதை சீர்திருத்தம் செய்வீர்கள். சனி, குரு மற்றும் ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால் பலவருடங்கள் நெருக்கமாக பழகியவர்கள் கூட உங்களை குறை கூறுவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். கன்னிப் பெண்களே! உண்மையான காதல் எது என்பதை உணருவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தையும் சாதகமாகும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க கொஞ்சம் போராட வேண்டி வரும். விட்டுக் கொடுத்து வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 5, 6 அதிஷ்ட எண்கள்: 4, 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, ரோஸ் அதிஷ்ட திசை: கிழக்கு

மிதுனம்
மிதமாக யோசித்து வேகமாக செயல்படுபவர்களே! சூரியன் ராசிக்குள்ளேயே தொடர்வதால் உங்கள் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் இல்லாமல் போகும். என்றாலும் ராசிநாதன் புதனும், பூர்வ புண்யாதிபதி சுக்ரனும் சாதகமாக இருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வசதி, வாய்ப்புகள் பெருகும். நல்லவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் உற்சாகம் அடைவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பள்ளிக் கல்லூரிக் கால தோழிகளை சந்தித்து மகிழ்வீர்கள். செவ்வாய் ஆட்சிப் பெற்று 6-ம் இடத்திலேயே அமர்ந்திருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். வழக்கு சாதகமாகும். குருபகவான் 3-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! தலைமை உங்களை முழுமையாக ஆதரிக்கும். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் அக்கறை காட்டுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். மௌனத்தால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 6, 8 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, நீலம் அதிஷ்ட திசை: வடக்கு

கடகம்
தன்கையே தனக்குதவி என்று வாழ்பவர்களே! குரு வலுவாக இருப்பதால் சாணக்கியத்தனமாக காரியம் சாதிப்பீர்கள். குடும்ப வருமானம் உயரும். அறிஞர்கள் நண்பர்களாவார்கள். சுபச் செலவுகளும் அதிகமாகும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். கல்யாணத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கொழுந்தனாருக்கு திருமணம் நிச்சயமாகும். சனி 5-ல் நிற்பதுடன், செவ்வாயும் 5-ல் நுழைந்திருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போங்கள். கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! உங்களின் நெருங்கிய சகாக்களை புதியவர்களிடம் அறிமுகப்படுத்தாதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். இடமாற்றம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கடினமாக உழைத்து முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 5, 7, 9 அதிஷ்ட எண்கள்: 2, 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மெரூண் அதிஷ்ட திசை: தெற்கு

சிம்மம்
அண்டமே சிதறினாலும் அஞ்சாதவர்களே! ராசிநாதன் சூரியன் வலுவாக இருப்பதால் அனுபவ அறிவை பயன்படுத்தி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ்ச்சிக்கு மயங்காமல் இருங்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புது வேலை அமையும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் மனைவிக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை புரிந்துக் கொண்டு நடந்துக் கொள்வார்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். அந்தரங்க விஷயங்களை வெளியிட வேண்டாம். ஜென்ம ராசியிலேயே ராகுவும், குருவும் நீடிப்பதால் இரும்பு சத்து உடலில் குறையும். எனவே காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். திடீர் திடீரென்று உணர்ச்சிவசப்படுதல் இவையெல்லாம் இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அருந்துங்கள். அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 6, 10 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், ஆலிவ்பச்சை அதிஷ்ட திசை: தென்கிழக்கு

கன்னி
உதவும் குணத்தால் உயர்ந்தவர்களே! செவ்வாய் ராசிக்கு 3-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தைரியம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்ததையும் தந்து முடிப்பீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். பிறமொழிக்காரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். அரசு விஷயங்கள் உடனே முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆன்மிக விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் உயரும். ராகுவும், குருவும் 12-ம் வீட்டில் நிற்பதால் உங்கள் மனம் எதையே தேடிக் கொண்டிருக்கும். பழைய கசப்புகளை இப்போது நினைத்து டென்ஷனாகாதீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு. சிலருக்கு புது வேலையும் அமையும். புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 6, 9 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, வெள்ளை அதிஷ்ட திசை: தென்கிழக்கு

துலாம்
யாருக்கும் தீங்கு நினைக்காமல் தானுண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். நீண்ட காலமாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். குருவும், ராகுவும் வலுவாக இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். செவ்வாய் உங்களுடைய ராசியை விட்டு விலகி 2-ல் அமர்ந்திருப்பதால் கோபம் தணியும். பாதச் சனி தொடர்வதால் குதிக்கால், பல் மற்றும் காது வலி வந்துப் போகும். பேச்சில் நிதானம் அவசியம். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சமயோஜித புத்தியால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 6, 5, 7 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், மஞ்சள் அதிஷ்ட திசை: மேற்கு

விருச்சிகம்
தெளிந்த நீரோடையைப் போல வெள்ளை மனசு கொண்டவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் ராஜதந்திரத்துடன் நடந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். பழைய காலி மனையை விற்று உங்கள் ரசனைக் கேற்ப புது வீடு வாங்குவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சனி உங்கள் ராசியிலேயே தொடர்ந்துக் கொண்டிருப்பதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். உடம்பை குறைப்பதற்காக, முக வசீகரத்துக்காக என்றெல்லாம் கண்டபடி மருந்து, கிரீம் எடுத்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள். மறப்போம், மன்னிப்போம் என்றிருக்கப்பாருங்கள். ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று உங்கள் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் அலைச்சல் குறையும். என்றாலும் சனியுடன் சேர்வதால் இரத்த அழுத்தம், மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் தடுமாற்றங்கள் இருக்கும். எதிர்நீச்சல் போட்டு இலக்கை எட்டிப் பிடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 7, 9 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர்நீலம் அதிஷ்ட திசை: வடமேற்கு

தனுசு
உதட்டால் பகட்டாக பேசாமல் உள்மனதிலிருந்து பேசுபவர்களே! கேது 3-ம் இடத்திலேயே முகாமிட்டிருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வேலைக் கிடைக்கும். ஊர் எல்லையில் வாங்கியிருந்த இடத்தை விற்று விட்டு சிலர் நகரத்தில் வீடு வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நாத்தனார் வகையில் உதவிகள் கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வேற்றுமதம், அண்டை மாநிலத்தவர்களால் நன்மை உண்டாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். செவ்வாய் ராசிக்கு 12-ல் நிற்கும் சனியுடன் சேர்ந்திருப்பதால் அவ்வப்போது தூக்கம் குறையும். எதிலும் அவசரப்பட வேண்டாம். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அரசியல்வாதிகளே! தொகுதி மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். கன்னிப் பெண்களே! புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய கடின உழைப்பை உயரதிகாரி மெச்சுவார். தன்னம்பிக்கை துளிர்விடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 5, 6, 10 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஊதா அதிஷ்ட திசை: கிழக்கு

மகரம்
சுற்றம் சூழ வாழ்வதை விரும்பும் நீங்கள், மகிழ்வித்து மகிழ்பவர்களே! சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தள்ளிப் போன காரியங்கள் முடிவடையும். பணப்பற்றாக்குறை நீங்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் வெற்றி உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 6-ந் தேதி முதல் புதனும், 8-ந் தேதி முதல் சுக்ரனும் ராசிக்கு 7-ல் நுழைந்து உங்களைப் பார்க்கயிருப்பதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். பழுதான சமையலறை சாதனங்கள், வாகனத்தை எல்லாம் மாற்றுவீர்கள். சிலர் வீடு, ஊர் மாற வேண்டி வரும். உறவினர், தோழிகளுடனான மோதல்கள் விலகும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். சனி லாப வீட்டில் நிற்பதுடன், செவ்வாயும் சாதகமான வீடுகளில் செல்வதால் வேற்றுமாநிலத்தவர், மொழியினரால் ஆதாயம் உண்டு. சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். சொத்து வாங்க முயற்சி செய்வீர்கள். குரு மற்றும் ராகு, கேது சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை, தாழ்வுமனப்பான்மை, படபடப்பு, வீண் டென்ஷன், மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! தலைமைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். வேலையாட்களால் வியாபாரத்தின் தரம் உயரும். உத்யோகத்தில் பணிகளை முடிப்பதில் தடை, தாமதம் வந்துப் போகும். புதிய முயற்சிகளில் ஒருபடி உயரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 6, 8 அதிஷ்ட எண்கள்: 3, 6 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, கிரே அதிஷ்ட திசை: தெற்கு

கும்பம்
தன் பத்து விரல்களையே சொத்தாக நினைப்பவர்களே! குரு வலுவாக அமர்ந்திருப்பதால் எல்லா விதமானப் பிரச்னைகளையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். 6-ந் தேதி முதல் புதனும், 8-ந் தேதி முதல் சுக்ரனும் ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைவதால் சின்ன சின்ன விபத்துகள் வந்துப் போகும். திடீர் நண்பர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள். தொண்டை வலியால் சிரமப்படுவீர்கள். சளித் தொந்தரவு அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். உறவினர், தோழிகளில் சிலர் உதவிக் கேட்டு நச்சரிப்பார்கள். சூரியன் 5-ல் தொடர்வதால் பிள்ளைகளின் படிப்பில் இப்போதிலிருந்தே அதிகக் கவனம் காட்டுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிக் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்யோகத்தில் உங்களுடன் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். யதார்த்தமாக நடந்துக் கொள்ள வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 5, 7, 9 அதிஷ்ட எண்கள்: 4, 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம்வெள்ளை, ஊதா அதிஷ்ட திசை: தென்மேற்கு

மீனம்
செய்நன்றி மறவாதவர்களே! ராகு வலுவாக 6-ம் இடத்திலேயே தொடர்வதால் வித்தியாசமாக யோசிப்பீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வராது என்றிருந்த பணம் வரும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். அவரின் தயக்கத்தை போக்குவீர்கள். பிள்ளை பாக்யம் கிட்டும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். அயல்நாட்டிலிருக்கும் தோழிகளால் திடீர் திருப்பம் உண்டாகும். செவ்வாய் 9-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தடைகள் விலகும். சகோதரங்களுடனான மனவருத்தம் நீங்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். குரு சாதகமாக இல்லாததால் வீண் வதந்திகள், எதிர்காலம் பற்றிய பயம் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! தலைமையின் கட்டளையை மீர வேண்டாம். கோஷ்டி பூசலில் சிக்காதீர்கள். கன்னிப் பெண்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும். கடந்த கால சுகங்களை அசைப்போடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 5, 6, 10 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ரோஸ் அதிஷ்ட திசை: கிழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *