shadow

download (4)

பணிகளில் பொறுப்புணர்வுடன் ஈடுபடும் மேஷ ராசி அன்பர்களே!

பெரும்பாலான கிரகங்கள் அளப்பரிய நன்மை தருவர். மனதில் நம்பிக்கை வளரும். உயர்ந்த செயல்களால், சமூகத்தில் மதிப்பு பெறுவீர்கள. பணவரவு அதிகமாக வாய்ப்பு வரும். தம்பி, தங்கை பாசத்துடன் நடந்து கொள்வர். புத்திரர்கள், உங்கள் சொல் கேட்டு நடப்பர். எதிர்ப்பு விலகி நன்மை கிடைக்கும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பெண்களால் உதவி உண்டு. வாழ்க்கைத்துணை, கருத்து இணக்கமுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில், உற்பத்தி, விற்பனை செழித்து வளரும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து சலுகை பெறுவர். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வமுள்ள ரிஷப ராசி அன்பர்களே!

செவ்வாய், சுக்கிரன், சந்திரனால் நன்மை உண்டாகும். பிறரின் விமர்சனத்தை தாங்கும் மனப்பக்குவம் வேண்டும். குடும்பச் செலவுக்கான தேவை அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்கள், அதிருப்தியடையும் படி நடந்து கொள்ளலாம். உடல்நிலை சீராக இருக்கும். வாழ்க்கைத்துணை வழிசார்ந்த உறவினர்களால் உதவி கிடைக்கும். அதிக உழைப்பால், தொழிலில் உற்பத்தி, விற்பனை மேம்படும். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமாக பின்பற்ற வேண்டும். பெண்கள் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். மாணவர்கள் லட்சியத்துடன் படிப்பர்.

பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

நல்ல அறிவுரையை ஏற்கும் மிதுன ராசி அன்பர்களே!

புதன், ராகு, சந்திரன், சனீஸ்வரர் வியத்தகு நற்பலன் தருவர். மனதில் குழப்பம் விலகி, வாழ்வின் வளர்ச்சிப்பாதை புலப்படும். பணிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். உங்களை புகழ்ந்து பேசுபவர்களிடம் கவனமாக இருங்கள். புத்திரர்களின் தகுதி, திறனுக்கேற்ப செயல்பட அனுமதியுங்கள். பூர்வ புண்ணியபலன் ஓரளவு நன்மை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். அதிக உழைப்பால், தொழில், வியாபாரத்தில், வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் எதிர்கால நலன்களை மனதில் வைத்து பணிபுரிவர். பெண்கள் பணவரவுக்கேற்ப செலவு செய்வர். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டுகளிலும் சாதனை புரிவர்.

சந்திராஷ்டமம்: 7.2.16 காலை 6:00 மணி முதல் 9.2.16 காலை 5:31 மணி வரை.

பரிகாரம்: பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

பிறரது நல்ல செயலை பாராட்டும் கடக ராசி அன்பர்களே!

குரு, சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். சிலரது தவறான ஆலோசனையால், தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். கவனம். உறவினர்களின் உதவி ஆறுதல் தரும். புத்திரர்களால், செலவு அதிகரிக்கும். அவர்களால் வரும் சிரமங்களை, இதமாக அணுகுவது ஓரளவு நன்மை தரும். வாழ்க்கைத்துணையின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் மட்டுமே, குடும்பத்தில் ஒற்றுமை வளரும். மங்கல நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில், சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் அதிகாரிகளுடன் அனுசரித்து போக வேண்டும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள், புதியவர்களை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.

சந்திராஷ்டமம்: 9.2.16 காலை 5:32 மணி முதல் 11.2.16 காலை 8:52 மணி வரை.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

திறமைக்கு மதிப்பளிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!

சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் அதிகளவில் நன்மை தருவர். பேச்சில் வசீகரம் தென்படும். புதிய முயற்சியால், தாமதமான பணிகள் நிறைவேறும். புத்திரர்களின் கவனக்குறைவை, இனிய அணுகுமுறையால் சரி செய்யவும். உடல்நிலை சுமாராக இருக்கும். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது. வாழ்க்கைத்துணையின் சொல்லும் செயலும், குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும். வெளியூர் பயணம் அதிக பயன் தரும். தொழில், வியாபாரத்தில், அபிவிருத்திப்பணி செய்வீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள், குடும்ப சிரமங்களுக்கு நல்ல தீர்வு காண்பர். மாணவர்கள், படிப்பில் சிறக்க கூடுதல் பயிற்சி மேற்கொள்வர்.

சந்திராஷ்டமம்: 11.2.16 காலை 8:53 மணி முதல் 13.2.16 காலை 11:18 மணி வரை.

பரிகாரம்:
துர்க்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

உயர்ந்த செயல்களால் நற்பெயர் பெறும் கன்னி ராசி அன்பர்களே!

கேது, சனீஸ்வரர், சுக்கிரன் நற்பலன் தருவர். உறவினர்கள் அன்புடன் நடந்து கொள்வர். சிறு பணியும் நேர்த்தியாக அமையும். புத்திரர்கள், உங்கள் சொல்லை வேதமென பின்பற்றுவர். குடும்பத் தேவையை தாராள செலவில் பூர்த்தி செய்வீர்கள். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில், உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்கள், நிர்வாகத்திடம் பெற்ற நற்பெயரை பாதுகாக்கும் வகையில் பொறுமை காப்பது நல்லது. பெண்களுக்கு, தெய்வ அருளால் பிரார்த்தனை நிறைவேறும். மாணவர்கள், நண்பர்களின் உதவியால் மகிழ்ச்சி அடைவர்.

சந்திராஷ்டமம்:
13.2.16 காலை 11:19 மணி முதல் இரவு 11.55 மணி வரை.


பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றி தரும்.

அறிவாற்றலும், செயல்திறனும் உள்ள துலாம் ராசி அன்பர்களே!

ராகு, குரு, சுக்கிரன், புதனால் நன்மை அதிகரிக்கும். வார துவக்கத்தில், தர்மகர்ம அதிபதி யோகம் அதிர்ஷ்டகரமான பலன்களைத் தரும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். புத்திரர்களின் செயலால், மனசஞ்சலம் ஏற்படலாம். நோய் தொந்தரவு குறையும். வாழ்க்கைத்துணையுடன், கருத்து வேறுபாடு ஏற்படலாம். அலைச்சல் உருவாக்கும் பயணங்களை தவிர்க்கவும். திட்டமிட்ட உழைப்பால், தொழில், வியாபாரத்தில், வளர்ச்சி கூடும். பணியாளர்கள், அதிக வேலை வாய்ப்பை ஏற்றுக் கொள்வர். பெண்கள், குடும்பத்திற்கு தாராள பணம் செலவு செய்வர். மாணவர்களுக்கு, படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.

பரிகாரம்: மீனாட்சி வழிபாடு, சகலநன்மைகளும் தரும்.

மனத்துணிவுடன் செயலாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே!

சுக்கிரன், சூரியன், சந்திரன் சிறப்பான பலன்களைத் தருவர். பழகுபவர்களிடம், இடம், சூழல் உணர்ந்து பேசுவீர்கள். செல்வவளம் அதிகரித்து, சவுபாக்கியம் நிறைந்த வாழ்வு பெறுவீர்கள். வீட்டில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யவும். வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். புத்திரர்களால் பெருமை ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உடல்நிலைக்கு சிகிச்சை எடுக்க வேண்டி வரலாம். மனைவி வழிசார்ந்த உறவினர்கள் உதவி கேட்டு வருவர். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகி சேமிப்பு கூடும். பணியாளர்களுக்கு பணித்திறன் அதிகரித்து நற்பெயர், சலுகை கிடைக்கும். பெண்கள் உறவினர் வீட்டு மங்கல நிகழ்ச்சிக்கு உதவுவர். மாணவர்கள், நன்றாகப் படித்து பெற்றோரிடம் பாராட்டு பெறுவர்.

பரிகாரம்: தன்வந்திரி வழிபாடு ஆரோக்கியம் தரும்.

கடின உழைப்பால் வாழ்வில் முன்னேறும் தனுசு ராசி அன்பர்களே!

குரு, செவ்வாய், சுக்கிரன், கேது வியத்தகு நற்பலன் வழங்குவர். சமூகத்தில், உங்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு திட்டமிட்டபடி நிறைவேறும். தம்பி, தங்கையின் பாசம், நெகிழ்ச்சி தரும். வெளியூர் பயணம் அதிகரிக்கும். புத்திரர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு, படிப்பு வேலையில் முன்னேற்றம் காண்பர். உடல்நிலை சுமாராக இருக்கும். சொத்து ஆவணங்களை கவனத்துடன் பாதுகாக்கவும். மனைவி நல்ல ஆலோசனை சொல்லி, உங்கள் செயல் சிறப்பாக அமைய உதவுவார். குடும்பச் செலவுக்கான தேவை அதிகரிக்கும். தொழில், வியாபார போட்டியை, மாற்று உபாயத்தால் சரி செய்வீர்கள். பணியாளர்களுக்கு, சக பணியாளர்களுடன் பிரச்னை வரலாம். பெண்கள், புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை ஏற்று படிப்பில் முன்னேறுவர்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு துன்பத்தைப் போக்கும்.

சிறிய செயலையும் நேர்த்தியாக செய்யும் மகர ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனீஸ்வரர் சுபபலன் தருவர். தைரியமாக எதையும் அணுகுவீர்கள். உங்கள் செயல் திறனை பலரும் உணர்ந்து அன்பு கொள்வர். முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். வாகனத்தில் பராமரிப்பு செலவு உயரும். புத்திரர்களின் ஆர்வமிக்க செயல்களை பாராட்டுவீர்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். மனைவி, குடும்ப ஒற்றுமையை பாதுகாப்பார். தொழில், வியாபாரத்தில், இடையூறுகளை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள் சேமிப்பு பணத்தை குடும்பத்திற்காக செலவு செய்வர். மாணவர்கள், அதிக முயற்சியால் படிப்பில் தேர்ச்சி அடைவர்.

பரிகாரம்:
முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

எல்லாரும் வளமுடன் வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சந்திரன் நன்மை தருவர். எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைய, சில பணிகளை மேற்கொள்வீர்கள். வீடு, வாகனம் வாங்க, யோகம் உண்டு. புத்திரர்களை, செல்லப் பிராணிகளுடன் விளையாடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பூர்வசொத்தில் பணவரவு ஓரளவு கிடைக்கும். ஊட்டச்சத்து நிறைந்த உணவை விரும்பி சாப்பிடுவீர்கள். மனைவியின் ஆலோசனை உங்களின் முக்கியமான செயல் நிறைவேற உதவும். தொழில், வியாபார வளர்ச்சி பெற, மாற்றுத் திட்டங்களை உருவாக்குவீர்கள். பணியாளர்கள், அலுவலகத்தில் கேட்ட கடன் கிடைக்க தாமதமாகும். பெண்கள் உறவினர்களை நன்கு உபசரிப்பர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பெற்றோரின் அன்பையும், பரிசையும் பெறுவர்.

பரிகாரம்:
சிவன் வழிபாடு, தொழிலில் உயர்வு தரும்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என நம்பும் மீன ராசி அன்பர்களே!

சூரியன், புதன், ராகு நற்பலன் தருவர். குடும்ப நிகழ்வுகள், இனிய அனுபவம் தரும். புதிய திட்டங்களை திறமையுடன் நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும். புத்திரர்கள் பொறுப்புடன் செயல்பட்டு நற்பெயர் பெறுவர். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். வழக்கு, விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். மனைவியின் உடல்நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு அதிக செலவு ஏற்படும். பெண்கள், அதிக பயன்தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். மாணவர்கள் எளிதாக படித்து தரத்தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்:
விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

Leave a Reply