shadow

தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது! தமிழக அமைச்சர்கள் உறுதி

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இருந்து ஜாமீன் பெற்று சென்னை திரும்பிய டிடிவி தினகரன் மீண்டும் கட்சிப்பணியில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது தமிழக அரசியலில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர்களை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைத்தது வைத்ததுதான். மீண்டும் அவர்கள் குடும்பத்தினர்களை கட்சியில் இணைக்கும் திட்டம் இல்லை என்று நேற்று நடந்த தமிழக அமைச்சர்கள் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர்கள் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை நடத்தினர்.  சுமார் இரண்டு மணி நேர நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பிற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜெயகுமார் கூறியதாவது:

“ ஏப்ரல் 17-ஆம் தேதி மின் துறை அமைச்சர் வேலுமணி வீட்டில் தமிழக அமைச்சர்கள் கூடி, கட்சியிலும், ஆட்சியிலும் டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை முழுமையாக விலக்கி வைப்பதாக முடிவெடுக்கப்பட்டது. இதே முடிவில் தற்போதும் உறுதியாக உள்ளோம்.

கட்சியில் இருந்து டிடிவி தினகரன் ஒதுங்கி இருக்க வேண்டும். டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரின் தலையீடு இல்லாமல், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது.தினகரனை சேர்ந்த யாரையும் கட்சியினர் சந்திக்கக் கூடாது.” என தெரிவித்தார்.

மேலும் டிடிவி தினகரனுக்கு ஆதரவளித்து வரும் 10 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Leave a Reply