shadow

ஜாமீன் பெற்ற சிலமணி நேரத்தில் மீண்டும் கைதான முன்னாள் பிரதமர்

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, தனது கணவர் பெயரில் நடத்தி வந்த அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டாக்கா சிறப்பு நீதிமன்றம் கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கலிதா ஜியா உள்ளிட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, கலிதா ஜியா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இவ்வழக்கில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை எனவும், ஐகோர்ட் நீதிபதி தலைமையில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார். மேலும், தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கலிதா ஜியாவை 4 மாத இடைக்கால ஜாமினில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து சிறை நடைமுறைகள் முடிந்து ஜாமினில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கலிதா ஜியா மீது 2015-ம் ஆண்டில் தொடரப்பட்ட கிரிமினல் வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை நடைமுறைப்படுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு கோமில்லா மாவட்டம் சவுத்தகிராம் பகுதியில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட கலிதா ஜியாவை கைது செய்ததற்கான ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும், 28-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கோமில்லா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டதால், கலிதா ஜியா ஜாமினில் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் மற்றொரு வழக்கில் கலிதா ஜியா மற்றும் அவரது பிஎன்பி கட்சியைச் சேர்ந்த 48 நபர்களை கைது செய்து ஏப்ரல் 24-ம் தேதி ஆஜர்படுத்தும்படி கோமில்லாவில் உள்ள மற்றொரு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது

Leave a Reply