shadow

warming alarmஇந்திய எல்லையைவிட்டு அடுத்த எல்லைக்கு மீனவர்கள் தாண்டும்போது செல்போனில் இருந்து ‘எச்சரிக்கை’ அறிவிப்பு ஒலி எழுப்பும் புதிய கருவியை தூத்துக்குடியை சேர்ந்த மீனவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்தியா- இலங்கை இடையே கடல்வழியில் எல்லை தெரியாமல்  தாண்டிவிடும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வு அடிக்கடி நடந்து வருகிறது. அந்த நிலைக்கு முடிவுகட்டும் வகையில் எல்லை கோட்டிற்கு சென்றதும் காண்பித்துக் கொடுக்கும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார் தூத்துக்குடியை சேர்ந்த ரெசிங்டன்(40).
 

1974-ல் ஐ.நா. சபை மூலம் இந்தியா- இலங்கை இடையே எல்லைக்கோடு வடிவமைக்கப்பட்டது. வளைந்து வளைந்து செல்லும் அந்த கோட்டில் 24 பாயிண்ட் வளைவுகள் உள்ளன. சுமார் 591 கடல் நாட்டிக்கல் மைல் தூரம் கொண்டிருக்கிறது. வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடல் எல்லையை உள்ளடக்கியதுதான் அந்த வளைவுகள்.

இந்த பகுதியில் மீன்பிடிக்கும்போதுதான் தெளிவான எல்லைக்கோடு தெரியாத வகையில் எல்லைதாண்டும் மீனவர்கள் இலங்கை கடற்படையிடம் பிடிபட்டு விடுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். பிடிபடும் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என இந்திய தரப்பிலிருந்து வைக்கப்படும் கோரிக்கைகள், தமிழர்கள், மத்திய அரசிடம் அரசியல் செய்யவும் இந்திய அரசு இலங்கை அரசிடம் அரசியல் செய்யவும் உதவுகிறது. நிரந்தரமான தீர்வு எதுவும் இல்லை.

வேண்டுமென்றே எல்லைத்தாண்டி மீன்பிடிக்க செல்லும் சில மீனவர்களை கட்டுப்படுத்தும் நோக்கம் தமிழக, மத்திய அரசிடம் இல்லாமல் உள்ளது. இதற்கு அரசியல் உந்துதலே காரணம் என்கிறார்கள்.

இதற்கு என்னதான் வழி? என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், மீனவ சமுதாயத்தை சேர்ந்த ரெசிங்டன் இப்படியொரு டெக்னிக்கலை கண்டுபிடித்திருக்கிறார். அன்ட்ராய்டு மென்பொருள் SOR (Save Our Race) வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்று இந்த மென்பொருள் பயன்பாட்டை மீனவர்கள் தங்கள் ஜி.பி.எஸ் வசதிகொண்ட செல்போனில் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொண்டால் போதும். கூகுல் ப்ளே ஸ்டோரிலிருந்து இலவசமாக கிடைக்கிறது.

இனிமேல் எந்த ஆபத்தும் இன்றி மீனவர்கள் தங்கள் தொழிலை செய்யலாம். இந்திய எல்லையைவிட்டு அடுத்த எல்லைக்கு தாண்ட போகும்போது செல்போன், ‘எச்சரிக்கை’ அறிவிப்பு ஒலி எழுப்பும். அதில் உஷாராகி படகை திருப்பிவிட வேண்டும். இல்லாமல் மேலும் தொடருமானால் அடுத்த எல்லைக்கு சென்றதற்காக ‘வெளியே’ என அறிவிப்பு செல்போனில் காண்பித்துக் கொண்டு ஆபத்து ஒலி எழுப்பும்.

இது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களும் செல்போன் இருக்கிற லொக்கேசன் கடலியல் கணக்குப்படியுள்ள எண்களை கொண்டு பதிவு ஆகிக் கொண்டே இருக்கும். ஆக படகு கரையில் கிளம்பியதுமுதல் சென்ற எல்லை எல்லாமே அதில் பதிவாகிவிடும். ‘தவறுதலாக சென்றுவிட்டோம்’ என சொல்வதற்கு வாய்ப்பில்லை.

இது குறித்து ரெசிங்டன் கூறும்போது, ‘‘கடந்த 40 வருடங்களாக இந்த மீனவர்கள் எல்லை தாண்டி சென்றதாக சொல்லி துன்புறுத்தப்படுகிறார்கள். இனி அப்படியொரு நிலை வரப்போறதில்லை. இந்த டெக்னிக்கலுக்கு எந்த செலவுமே இல்லை. கடலுக்கு போயிருப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கும் இது ரொம்ப உதவும்.

அவ்வப்போது காணாமல் போகும் மீனவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். எந்தவித சிக்னலும் இதற்கு தேவையில்லை. இன்னும் பல அம்சங்கள் இந்திய அரசு ஆதரவுடன் இதனுடன் இணைக்கலாம். அரசு ஒத்துழைப்பிற்காக விண்ணப்பித்திருக்கிறோம். அவர்களும் ஹெல்ப் பண்றதா சொல்லியிருக்காங்க’’ என்றார்.

நல்லது நடந்தால் சரிதான்…

Leave a Reply