shadow

நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. பெயர் சேர்க்க ஒரு மாதம் அவகாசம்

rajeshlakhani2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிகள் தொடங்க உள்ளதால் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நாளை முதல் ஒருமாத காலத்திற்கு அனுமதிக்கப்படுவதால தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2017-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் தொடங்கவுள்ளன. இதற்கான கால அட்டவணை வெளியிடப்படுகிறது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியல் 1.9.16 அன்று (நாளை) வெளியிடப்படும்.

அன்று முதல் 30-ந் தேதி வரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க – நீக்க, அல்லது திருத்த மனுக்கள் அளிக்கலாம். மனுக்கள் பெறுவதற்காக 11 மற்றும் 25 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரியின் www.el-e-ct-i-ons.tn.gov.in என்ற வலைதளத்தில் காணலாம். 10 மற்றும் 24-ந் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சரிபார்க்கப்படும். வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புகிறவர் 1.1.17 அன்று 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். புகைப்பட வாக்காளர் பட்டியல்கள், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி அதிகாரிகளின் அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் ஆகியோரின் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி அமைவிடங்களிலும், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் அவற்றை வாக்காளர்கள் பார்க்கலாம்.

முதல் முறையாக பெயர் சேர்க்க, அல்லது ஒரு சட்டமன்றத் தொகுதியிலிருந்து மற்றொரு சட்டமன்றத் தொகுதிக்கு வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 6-ன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்க 6ஏ படிவத்தையும், ஒரு சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாறியிருந்தால் 8ஏ படிவத்தையும், பெயரை நீக்க வேண்டுமானால் படிவம் 7-ஐயும் பயன்படுத்த வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், வயது, பாலினம், உறவு முறை போன்றவற்றில் திருத்தம் அல்லது சரியான புகைப்படம் இடம்பெறச் செய்வதற்கு படிவம் 8-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். படிவங்களை நிர்ணயிக்கப்பட்ட அலுவலகங்களில் இருந்து பெறலாம். இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடம் வாக்குச்சாவடி நிலை அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி ஆகியோரிடம் அளிக்கலாம். இணையதள முகவரியிலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

முதன்முறையாக விண்ணப்பிப்போரைத் தவிர மற்ற மனுதாரர்கள் அவர்களுடைய முந்தைய முகவரியையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணையும் படிவத்தில் குறிப்பிடவேண்டும்.

இருப்பிட மாற்றம் செய்யாமலிருந்தாலும்கூட, தற்போதைய முகவரியில் எத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வசித்து வருகிறார் என்பதையும், முன்பு பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிக்க இயலவில்லை என்பதையும் அல்லது தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது என்றும் குறிப்பிட வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்து, ஆனால் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்திருந்தால், வட்டாட்சியர் அல்லது மண்டல அலுவலகத்தில் படிவம் 1-ல் புதிய அட்டை வழங்கக்கோரி எப்போதும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் ஓரிடத்திற்கு மேல் பெயரை பதிவு செய்ய முயன்றால் அல்லது தவறான தகவல்களை தருகிற எந்த ஒரு நபரும் குற்ற நடவடிக்கைக்கு உள்ளாவார்.

வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ-ஐ நேரிலோ, தபால் மூலமோ அளிக்க வேண்டும். அதனுடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், ஏனைய பிற விவரங்களுடன் விசாவின் செல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட்டின் தொடர்புடைய பக்கங்களின் நகலையும் சேர்த்து அளிக்கவேண்டும். படிவம் 6ஏ-ஐ தபாலில் அனுப்பும்போது பாஸ்போர்ட்டின் நகல்கள் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.

அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து வீடுகளுக்குச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர் விசாரணை மேற்கொள்வார். கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளின் பட்டியல் தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தில் வெளியிடப்படும். ஆட்சேபனை ஏதாவது இருந்தால், அப்பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply