shadow

Sri_Neelamega_Perumal_Tanjore1

 

 திருமலை ஏழுமலையானுக்கு ஓய்வு அளிக்கும் விஷயத்தில், தேவஸ்தான அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாடு முழுவதும் உள்ள வைணவ கோவில்களில், வைகாசனம் அல்லது பஞ்சராத்ர ஆகம விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில், திருமலை ஏழுமலையான் கோவிலில், வைகாசன ஆகம முறைப்படி, பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தினசரி, அதிகாலை, மதியம், நள்ளிரவு பூஜைகள் இரண்டு முறை, பெரிய மாலை சேவை ஒருமுறை, அர்ச்சனை, நைவேத்தியம், மூன்று முறை நடக்கின்றன. இடையில், ஏழுமலையானுக்கு குறைந்த பட்ச ஓய்வு அளிக்க வேண்டும்.

கட்டாய ஓய்வு ஏழுமலையானுக்கு, 2011க்கு முன், ஏகாந்த சேவைக்கு பின், 15 நிமிடங்கள் மட்டுமே ஓய்வு அளிக்கப்பட்டது. உடனே, சுப்ரபாத சேவை துவங்கி விடும். ஆனால், ஆகம முறைப்படி, இது தவறு என்று அறிந்த, அப்போதைய தேவஸ்தான செயல் அதிகாரி, எல்.வி.சுப்ரமணியம், ஏழுமலையானுக்கு ஒன்றரை மணி நேரம், ஓய்வு அளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கினார். அதன்படி, நள்ளிரவு ஏகாந்த சேவை முடிந்த பின், 1:30 மணிக்கு ஏழுமலையான் கோவில் நடை சாற்றப்படும்; அதிகாலை, 3:00 மணிக்கு சுப்ரபாத சேவைக்காக, கருவறை கதவு, மீண்டும் திறக்கப்படும்.

தற்போது, லட்சம் பக்தர்கள், ஏழுமலையானை தரிசித்தனர் என்று பதிவேட்டில் குறிப்பதற்காக, தேவஸ்தான அதிகாரிகள், ஏழுமலையானின் கைங்கரியங்களில், குறை வைத்து, அவருக்கு அளிக்க வேண்டிய ஓய்வை அளிக்காமல், ஆகம விதியை மீறி வருகின்றனர் என, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. கடந்த சனிக்கிழமை, பக்தர் கூட்டம் அதிகம் இருந்ததால், நள்ளிரவு, 12:30 மணிக்கு துவங்க வேண்டிய, ஏகாந்த சேவை, நள்ளிரவு, 1:45 மணிக்கு துவங்கியது. பின், ஏழுமலையானுக்கு ஓய்வளிக்காமல், 15 நிமிடத்தில், சுப்ரபாத சேவை துவங்கப்பட்டது.

Leave a Reply