shadow

போரூர் ஏரியை தனியாரிடம் இருந்து மீட்க வேண்டும். தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

porurசென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் போரூர் ஏரியின் ஒருபகுதி தனியார் கைவசம் இருப்பதாகவும், அந்த பகுதியை தமிழக அரசு மீட்க வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ஆதரவாக அரசு செயல்படக்கூடாது, அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பயன்பாட்டிற்காககூட நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களைக் கட்டக்கூடாது என்றெல்லாம் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பலமுறை அறிவுறுத்தியும், உத்தரவிட்டும் அதிமுக அரசு திருந்தியபாடாக தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக சென்னையின் மிகப்பெரிய நீர்நிலையான, போரூர் ஏரி குறித்து பல்வேறு சர்ச்சைகள், புகார்கள் எழுந்துள்ளதை அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை. போரூர் ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில், அதன் ஒருபகுதியை மண் கொட்டி தனியாருக்குத் தாரைவார்க்க, தமிழக அரசின் பொதுப்பணித்துறை முடிவெடுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத் தக்கதாகும். மண்கொட்டி போரூர் ஏரி பிரிக்கப்பட்டால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, நீர்வரும் பாதை அடைபட்டு போய்விடுமென அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகஅரசு, போரூர் ஏரியின் ஒருபகுதியை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்திருந்தாலும், இன்றைய சூழலில் பொதுமக்களின் எதிர்ப்பையும், சென்னையின் குடிநீர் தேவையையும், சுற்றுச்சூழலையும் கருத்தில்கொண்டு, அந்த உத்தரவை ரத்து செய்து தனியாரிடமிருந்து போரூர் ஏரியின் ஒரு பகுதியை மீட்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னையின் மிகப்பெரிய ஏரியாக இருந்த போரூர் ஏரி, தற்போது பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளால் குளம்போல் சுருங்கிவிட்டது. நீர்நிலைகளை பாதுகாக்கவேண்டிய தமிழக அரசின் பொதுப்பணித்துறையே, போரூர் ஏரியின் நடுவில் மண்கொட்டி மூடுவதை காணும்போது வேதனையாக உள்ளது. சென்னையில் ஏற்கனவே பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, மூடப்பட்டு, தனியார் கட்டிடங்களாகவும், அரசு கட்டிடங்களாகவும் காட்சியளிக்கிறது.

 கூவம் ஆற்றிலே தூண்கள் அமைத்தால், நீர்வழிப்பாதை அடைப்பட்டு போகுமென சொத்தைக்காரணம்கூறி, உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் அதை கண்டுகொள்ளாமல், தன்னுடைய பிடிவாதத்தால் மத்திய அரசின் பறக்கும்சாலை திட்டமான, சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் திட்டத்தையே தடுத்து நிறுத்திய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அதைப்போன்றே இதையும் தடுத்து நிறுத்துவாரா? என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு பக்கம் பயன்பாட்டில் இருக்கின்ற நீர்நிலைகளை மூடுவதும், மறுபக்கம் புதியதாக நீர்நிலைகளை உருவாக்குவதும் என இரட்டைவேடம் போடுவதில் அதிமுக அரசுக்கு இணை யாருமில்லை.

டெல்லியில் நடைப்பெற்ற நதிகள் இணைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நிதிஅமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நதிகள் இணைப்பால் மாநிலங்களின் நலன் பாதிக்கப்பட கூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அவரின் பொதுப்பணித்துறையே போரூர் ஏரியை அழிக்க நினைப்பது யாருடைய நலனுக்காக? இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். வெளிநாடுகள் இதுபோன்ற நீர்நிலைகளை மேம்படுத்துவதில்தான் கவனம் செலுத்துகின்றன. நீர்நிலைகள் மூடப்பட்டுவிட்டால், சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடிநீர் பாதிக்கப்படும், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். அதன் மூலம் பஞ்சம், பசி, பட்டினி என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். நம்முடைய வருங்கால சந்ததியினரின் நிலையை எண்ணிப்பார்க்காமல், இயற்கை நமக்களித்த வரப்பிரசாதமான நீர்நிலைகளை பாதுகாக்காமல், அழிப்பதென்பது என்ன நியாயம்? அதனால்தான் பொதுமக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுத்து போரூர் ஏரியை தனியாரிடமிருந்து மீட்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். போரூர் ஏரியை தமிழகஅரசு மீட்கத்தவறும்பட்சத்தில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.       
தேசிய முற்போக்கு திராவிட கழகம்

                                     தலைவர்

Leave a Reply