விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் உருவான ஜில்லா படம் வரும் பொங்கல் திருநாளில் வெளிவருகிறது. இந்த படத்தை ஆர்.பி.செளத்ரி தயாரிக்க புதுமுக இயக்குனர் நேசன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஜய் மற்றும் மோகன்லால் என இரண்டு பிரபல ஹீரோக்கள் நடித்திருப்பதால் யார் பெயரை முதலில் டைட்டில் கார்டில் போடுவது என்ற குழப்பம் இயக்குனர் நேசனுக்கு நேரிட்டது. இதையறிந்த மோகன்லால், உடனே இயக்குனரை அழைத்து, ‘இது தமிழ்ப்படம். தமிழகத்தில் விஜய்தான் பெரிய நடிகர். எனவே விஜய் பெயரை முதலில் போடுங்கள் என்றார். ஆனால் விஜய் இதை ஏற்கவில்லை. மோகன்லால் ஒரு சீனியர் நடிகர், அவருக்குரிய மரியாதையை நாம் கண்டிப்பாக கொடுக்கவேண்டும், எனவே மோகன்லால் பெயரையே முதலில் போடுங்கள் என்று இயக்குனர் நேசனுக்கு அன்புக்கட்டளையிட்டார்.
பின்னர் இந்த பிரச்சனையை தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் எடுத்துச்சென்ற இயக்குனர் அவருடைய யோசனைப்படி “விஜய்-மோகன்லால் இணைந்து நடிக்கும்” என்று டைட்டிலில் இரண்டு பெயரையும் சேர்த்து போடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த முடிவையும் விஜய் ஏற்றுக்கொள்ளவில்லை. மோகன்லாலுக்கு சமமாக என்னை ஒப்பிட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் வேறு வழியின்றி தற்போது மோகன்லால் பெயரை முதலில் போட இயக்குனர் முடிவு செய்துள்ளார்.
முதலில் தன்னுடைய பெயர்தான் போடவேண்டும் என்று வீம்பு பிடிக்கும் படவுலகில், விஜய்யின் பெருந்தன்மையை நினைத்து படக்குழுவினர் பெருமையாக கோலிவுட்டில் பேசிக்கொண்டு வருகின்றனர்.