அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் விஜய் சேரப்போவதாக சில மாதங்களுக்கு முன் தகவல்கள் கசிந்தன. இதை விஜய் மறுத்திருந்தபோதிலும் இந்த எண்ணம் அவரது மனதில் இருப்பதாகத்தான் தெரிகிறது.

இதன் முதல் கட்டமாக விஜய் ரசிகர்கள் பலர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து வருகின்றனர். முதலில் தனது ரசிகர்களை ஆம் ஆத்மி கட்சியில் சேரவைத்துவிட்டு, அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை பொறுத்து விஜய் ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ளலாம் என்ற யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று ‘இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் பலர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஜாபர் சாதிக் தலைமையில் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த அமைப்பு முழுமையாக  ‘ஆம் ஆத்மி’ கட்சியில் இணைக்கப்பட்டுள்ளது. தாராபுரத்தில் கட்சி அலுவலகம் திறந்து செயல்படவும் ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து தாராபுரம் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்த ஜாபர் சாதிக், செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில் “சாமானிய மக்களுக்காக போராடும் ‘ஆம் ஆத்மி’ கட்சியில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி முன்னிலையில் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளோம். மேலும் 13 மாவட்டங்களில் உள்ள விஜய் மன்றப் பொறுப்பாளர்கள் ‘ஆம் ஆத்மி’யில் இணைய எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் அந்த மாவட்டங்களின் பொறுப்பாளர்களும் எங்களைப் போல் ‘ஆம் ஆத்மி’யில் இணைவர்’ என்று கூறினார்.

இதனால் கூடியவிரைவில் விஜய்யும் ஆம் ஆத்மியில் இணைவார் என்று கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத்தலைவர் விஜய்யை தேடி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Leave a Reply