விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போன்ற கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு சம அளவிலான ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே கூறுகையில், ‘ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் 5 செட் வரை கடுமையாகப் போராட வேண்டியுள்ளது.

ஆனால், மகளிர் பிரிவில் அதிபட்சம் 3 செட் தான் விளையாடுகிறார்கள். பரிசுத் தொகை மட்டும் சரிசமமாக வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். இதில் நியாயம் இல்லை. மகளிர் ஒற்றையர் ஆட்டங்களும் 5 செட்கள் நடைபெற வேண்டும். வீராங்கனைகள் இதற்குத் தயாராக இருந்தால் மட்டுமே சரி சமமான பரிசுத் தொகை கேட்கலாம். இல்லாவிட்டால் எங்களுக்கும் 3 செட் ஆக்க வேண்டும்’ என்று சவால் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ‘தற்போது மகளிர் பிரிவில் 3 செட் ஆட்டங்களே நடந்து வருகின்றன. அதை 5 செட்களாக மாற்றினாலும் நாங்கள் விளையாட தயாராகவே இருக்கிறோம். குறிப்பாக, கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் இந்த மாற்றம் செய்யப்பட்டால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை’ என்கிறார் வீனஸ். மகளிர் டென்னிஸ் சங்க தலைவர் ஸ்டேசி அலஸ்டரும், வீராங்கனைகள் இந்த சவாலுக்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply