shadow

loan_2226796f

நீங்கள் முதலில் வீட்டுக் கடனை வாங்கிய வங்கியிலிருந்து வேறொரு வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றிக்கொள்வது இப்போது மிக எளிதான விஷயம். வங்கிக்கு வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. சிறிய வேறுபாடுகளாக இருந்தாலும் பயனாளருக்கு அது மிகப் பெரிய விஷயம்தான்.

கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்ற, முதலில் கடன் பெற்ற வங்கியிடம், கடன் பரிமாற்றக் கோரிக்கையை விண்ணப்பமாகக் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அந்த வங்கி, உங்கள் கோரிக்கையைப் பரிசீலித்து நிலுவைத் தொகை குறிப்பிடப்பட்டுள்ள ஓர் அறிக்கையை அதனுடன் இணைத்து ஒப்புதல் கடிதம் அல்லது ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை அளிக்கும். நீங்கள் அந்த ஆவணங்களைப் புதிய வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை ஆய்வு செய்த பின் உங்களுடைய கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். பழைய வங்கி உங்களுடைய பழைய கடனை முடித்து வைக்கும். இந்த நடைமுறை முடிந்த உடன் உங்களுடைய சொத்துப் பத்திரங்கள் புதிய வங்கியிடம் ஒப்படைக்கப்படும்.

வங்கி அல்லது வீட்டு நிதி நிறுவனம், அதன் பின்னர் தங்களுடைய நடைமுறை வட்டி விகிதத்தில் உங்களுக்குக் கடன் வழங்கும். அந்தக் கடன் மிதக்கும் வட்டி வீதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தால், உங்களுடைய

புதிய நிதியாளர் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும். அதனால் உங்களுடைய கடனுக்கான இஎம்ஐ உயரக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மீண்டும் கடனுக்கான செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

வீட்டுக் கடனை மாற்றுவதற்கு மாற்றப் போகும் வங்கியின் முன் கட்டண விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். புதிய கடனுக்கு ஆகும் ப்ராசஸிங் செலவைச் சரிபார்க்க வேண்டும். வட்டி விகிதத்தை அடிப்படையாக வைத்து மட்டும் கடனை மாற்றலாமா அல்லது வேண்டாமா என்று முடிவுசெய்ய முடியாது. மாறாக ப்ராசஸிங் கட்டணம் மற்றும் ஃப்ரீ பேமெண்ட் கட்டணம் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாகப் பார்த்து முடிவுசெய்ய வேண்டும்.

வீட்டுக் கடனுக்குத் தற்போது இருக்கும் திருப்பிச் செலுத்தும் முறையையும், அதுபோல் புதிய கடன் வாங்கினால் அதைத் திருப்பிச் செலுத்தும் முறை, அதன் வட்டி மற்றும் இதர கட்டணங்கள் போன்றவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வட்டி விகிதத்தை மட்டும் பார்ப்பது சரியாக இருக்காது.

Leave a Reply