shadow

பிரபாகரனைச் சந்திக்க சென்றபோதே ராணுவம் என்னைச் சுட்டுக்கொன்றிருந்தால்!! வைகோவின் உணர்ச்சிமிகு பேச்சு

vaikoகடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணி என்ற கூட்டணியை ஏற்படுத்தி அதிமுக, திமுக மாற்றும் என்ற முழக்கத்துடன் களமிறங்கிய வைகோ படுதோல்வி அடைந்தார். இந்நிலையில் சோர்ந்து இருக்கும் தனது கட்சி தொண்டர்களை உற்சாகமூட்ட மாவட்டந்தோறும் எழுச்சி கூட்டங்களை வைகோ நடத்தி வருகிறது.

இதன்படி நேற்று கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கான மதிமுக செயல் வீரர்கள் கூட்டம், தருமபுரியில் நடந்தது. அதில் பங்கேற்ற ஆவேசமாக பேசியபோது, “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நான் பார்க்க சென்றபோதே, இந்திய ராணுவம் என்னைச் சுட்டுக் கொன்றிருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது” என்று கூறினார். அவர் மேலும் இந்த கூட்டத்தில் பேசியதாவது:

“தலைவர் பிரபாகரனைப் பார்க்க சென்ற போது, என்னை இந்திய கடற்படை மடக்கியதே, அப்போதே என்னை சுட்டுப் பொசுக்கியிருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. தலைவர் (கலைஞர்) அன்பு தம்பியே என நெக்குருகியிருப்பார். தி.மு.க. கொடி கம்பங்களில், என் பெயர் நீங்கா இடம்பிடித்திருக்கும். மாவட்டம் தோறும் என் பெயரில் நினைவு அரங்கங்கள் எழுப்பப்பட்டிருக்கும்.

மக்கள் நலக்கூட்டணியை அமைப்பதில் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பதைச் சொல்கிறேன். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக 4 கட்சித் தலைவர்கள் அமர்ந்து பேசினோம். நான்கு கட்சி மட்டும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்தோம். கட்சிக்கு இரண்டு பேர் வீதம் மொத்தம் 8 பேர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றோம். ம.தி.மு.க. சார்பில் நானும் மல்லை சத்யாவும் சென்றோம். மூன்று கட்சியில் வந்த 6 தலைவர்களும் விஜயகாந்த் வந்தால்தான் ஜெயிக்க முடியும். நாம் 4 பேரும் தனியாக நின்றால் ஒரு இடம் கூட வெல்ல முடியாது என்று சொன்னார்கள். அரசியல் பார்வையாளர்களும் பத்திரிக்கைகளும் அதே கருத்தை முன்வைத்தன.

‘விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணிக்கு வர மாட்டார். வைகோவின் ஈகோதான் அதற்குக் காரணம். விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதை வைகோ ஏற்க மாட்டார்” என அனைத்து ஏடுகளும் எழுதின. அதே நேரம் தே.மு.தி.க.வோடு கூட்டணி அமைத்தால் வெல்லும் சூழல் இருப்பதாகவும் சில பத்திரிகைகள் எழுதின.

தி.மு.கவில் ‘பழம் நழுவிவிட்டது பாலில் விழப்போகிறது’ என்றார்கள். வெற்றிகரமாக விஜயகாந்தை அழைத்து வந்தேன். வைகோ சாதித்துவிட்டார் என பத்திரிக்கைகள் பாராட்டின. ஆனால் அதற்குப் பின்னால் நடந்ததெல்லாம் தலை கீழ். எத்தனை பழிச்சொற்கள்..? எத்தனை அவமானங்கள்.? எல்லாம் கடந்து உங்களுக்காக, உண்மைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது கட்சியைப் பற்றியும் உங்களைப் பற்றியும் மட்டுமே சிந்தனை. வேறு சிந்தனையே இல்லை. உறக்கமே இல்லை

காலம் இப்படியே இருக்காது. மாறும். எப்போது மாறும் என்று கேட்காதீர்கள். நாம் பதவிக்காக இந்த இயக்கத்தைத் தொடங்கவில்லை உங்களிடம் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன். இந்த நாடு சீரழிந்து கிடக்கிறது. நாமும் ஊழல் செய்ய வேண்டுமா.? யார் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. நாம் போராட்டக் களத்தில் நிற்கிறோம். போராட்டம்..கண்ணீர்.. தியாகம்… இதுதான் நம் பாதை பதவி அல்ல. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். ஒரு போது உங்களை நான் தலைகுனிய வைக்க மாட்டேன்” இவ்வாறு வைகோ பேசினார்.

Leave a Reply