shadow

கமலுக்கு முன்பாகவே நான் முடித்துவிட்டேன்: வைகோ

சமீபத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவர் ஒருவரின் தந்தை கேரளாவில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் மரணம் அடைந்த கிருஷ்ணசாமியின் உடல் தமிழகத்திற்கு கொண்டு வர தான் கேரள முதல்வரிடம் கேட்டுக்கொண்டதாகவும், அதற்குரிய நடவடிக்கை எடுத்த கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு நன்றி என்றும் கமல் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வைகோ கூறியதாவது:

திருத்துறைத்துறைபூண்டியிலிருந்து மகனை நீட் தேர்விற்கு அழைத்துச் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவனின் தந்தை கிருஷ்ணசாமி இறந்த செய்தியை அன்று காலை 10.20 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து முத்துக்குமார் என்பவர் போன் மூலம் எனக்குத் தகவல் தந்தார்.

நான் உடனே கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து காலை 10.30 மணிக்கே கவர்னர் சதாசிவத்திடம் கிருஷ்ணசாமி குறித்துப் பேசி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டேன். அவர் எந்தக் குறையின்றி செய்து தரச் சொல்லி உத்தரவிட்டதையடுத்து, எர்ணாகுளம் கலெக்டர் உடனிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்தார். இது குறித்து நான் தொலைக்காட்சிகளில் காலை 10.45 மணிக்கே தெரிவித்தேன். டிவிக்களில் செய்திகளும் வந்தன. ஆனால் நடிகர் கமல் மதியம் 2.21 மணிக்கு ஒரு ட்விட்டரில் பதிவு போடுகிறார்.

அதில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஐ.ஜியிடம் பேசினேன். இறந்த கிருஷ்ணசாமி உடலை அனுப்பக் கேட்டுக்கொண்டேன். அந்தக் குடும்பத்திற்கான செலவை நான் ஏற்றுக் கொள்வேன் என்றும் அதில் கூறியிருந்தார். அவர் பேசியிருக்கலாம் ஆனால் அதற்கு முன்பாகவே நான் கவர்னரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதை மறைத்துத் தான்தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கு காரணம் என்பது போல் பதிவிட்டுள்ளார். அரசியலில் இவர் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி. இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னவர்தான் தற்போது மக்கள் நீதி மய்யம் எனக் கட்சி தொடங்கியுள்ளார்” இவ்வாறு கமல் குறித்து வைகோ பேசினார்.

Leave a Reply