shadow

வாலு. திரைவிமர்சனம்
vaalu
மூன்று வருடங்கள் ஒரு படம் முடங்கிப்போய் அதன் பின்னர் இளையதளபதி விஜய் தலையிட்டதால் மட்டுமே வெளிவந்துள்ள படம் ‘வாலு’. ஒருவேளை இந்த படத்தை விஜய் பார்த்திருந்தால் கண்டிப்பாக தலையிட்டிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு படுகேவலமான ஒரு படம். லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு ஒரு ஹீரோவை ஓவர் பில்டப் செய்திருக்கும் படம்தான் ‘வாலு’

vaalu promo songவேலைவெட்டி இல்லாமல் நண்பர்களுடன் தண்ணியடித்துவிட்டு ஊர் சுற்றும் ஹீரோதான் சிம்பு. வழக்கம்போல் அப்பாவிடம் காசு வாங்கி செலவழிப்பது, வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, தங்கையை கேலி செய்பவர்களை துவைத்து காயப்போடுவது, என ஏரியாவின் ஹீரோவாக இருக்கும் சிம்பு, ஒருநாள் தற்செயலாக ஹன்சிகாவை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். இந்த நேரத்தில் ஹன்சிகாவின் செல்போன் சிம்புவிடம் சிக்க, அதை vaalu  vaaluதிருப்பி கொடுக்க ஒரு இடத்திற்கு வரச்சொல்லும்போது, விபத்தில் சிக்குகிறார் ஹன்சிகா. ஹன்சிகாவை காப்பற்ற அந்த செல்போனையே அடகு வைத்து மருத்துவமனைக்கு செலவழிக்கிறார் சிம்பு. இப்படியாக இருவரும் நெருக்கமாகும் நேரத்தில் ஒருநாள் தன்னுடைய காதலை ஹன்சிகாவிடம் சிம்பு கூற அவரோ எல்லாருமே எதிர்பார்த்த ஒரு பதிலை சொல்கிறார்.

ஏற்கனவே ஒருவருடன் தனக்கு நிச்சயமாகிவிட்டது என்றும், இன்னும் இரண்டு வருடத்தில் இருவருக்கும் திருமணம் என்றும் ஹன்சிகா கூறுகிறார். இரண்டு வருட கேப் இருக்கின்றதே அதற்குள் ஹன்சிகாவை மடக்கிவிடு என நண்பர்கள் தூண்டிவிட, எனக்கு ரெண்டு வருஷமெல்லாம் தேவையில்லை பத்தே நாட்களில் மடியவைக்கிறேன் என்று சவால் விடுகிறார். இந்நிலையில் ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் மாப்பிள்ளை ஒரு பெரிய தாதா என்றும் சிம்புவுக்கு தெரிய வருகிறது. தாதாவையும் சமாளித்து ,ஹன்சிகாவையும் பத்தே நாட்களில் காதலை எப்படி சொல்ல வைத்தார் என்பதுதான் மீதிக்கதை

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பதை யாருமே சிம்புவுக்கு சொல்லித்தரவில்லை போலும். ஒவ்வொரு காட்சியிலும் ஓவராக அலட்டுகிறார். வழக்கம்போல் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார். சண்டைக்காட்சிகளில் துடிப்பு இருந்தாலும் நம்பும்படி ஒரு சண்டைக்காட்சியும் இல்லை. ஒரே குத்தில் இரண்டு ரயில்களுக்கும் அப்பால் போய் விழும் ஒருவர் அடுத்த காட்சியிலேயே மீண்டும் எழுந்து வந்து அடிப்பது, பைக்கில் செல்லும்போது கார் பயங்கரமாக மோதினாலும் அடுத்த நொடியே மீண்டும் பைக்கில் வருவது என படம் முழுவதும் முழுக்க முழுக்க சிம்புவின் விசிலடிச்சான் இளசுகளுக்காவே வைக்கப்பட்ட காட்சிகள். மேலும் சிம்பு இந்த படத்தில் தன்னைவிட ‘தல அஜீத்தை பெரிதும் நம்பியுள்ளார் என்பதை பல காட்சிகள் உணர்த்துகின்றது. தல பெயரை சொல்லும்போதும், தல முகத்தை காண்பிக்கும்போதும் தியேட்டரே அதிர்கிறது.

எல்லா தமிழ் சினிமா போலவே இந்த படத்திலும் ஹீரோயின் ஹன்சிகாவுக்கு முக்கியத்துவம் இல்லை. சிம்புவுடன் கனவில் வெளிநாட்டில் டூயட் பாடுவது, அவ்வபோது சிம்புவுடன் செல்லச்சண்டை போடுவது என தனக்கு தெரிந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரிடம் நாம் இதற்கு மேல் எதிர்பார்ப்பதும் தவறுதான்.

படத்தின் ஒரே ஆறுதல் ஆடுகளம் நரேன் கேரக்டர். இப்படி ஒரு அப்பா நமக்கு இருக்கமாட்டாரா? என ஏங்க வைத்துவிட்டார். மற்றபடி சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பெல்லாம் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு விசேஷம் எதுவுமில்லை.

தமனின் இசையில் பாடல்கள் மகா மட்டம். மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடனப்பயிற்சி அளித்தவர்தான் இந்த படத்திற்கும் பயிற்சி அளித்தாரா? என்று சொல்லும் அளவுக்கு உள்ளது நடனங்கள். பின்னணி இசையில் ஒரே ‘வாலு’ இரைச்சல்.

இயக்குனர் விஜய் சந்தர் இன்னும் ஒருசில வருடங்கள் வேறு யாராவது நல்ல இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துவிட்டு அதன்பின்னர் அடுத்த படம் இயக்குவது அவருக்கும் அடுத்த பட தயாரிப்பாளருக்கும் நல்லது. ஒரே ஒரு காட்சியை கூட புதுமையாக வைக்கவில்லை. எந்த காட்சியை பார்த்தாலும் இதை ஏதோ ஒரு படத்தில் பார்த்திருக்கின்றோம் என்ற உணர்வுதான் ஏற்படுகிறது. இதில் ஆங்காங்கே காதல் தத்துவ வசனங்களை வேறு கொட்டி எரிச்சலூட்டுகிறார்.

மொத்தத்தில் ஒட்ட நறுக்கப்பட வேண்டிய ‘வாலு’தான் இந்த படம்.

Leave a Reply