shadow

7 பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு தடை. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை

இந்தியா உள்பட அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் பாகிஸ்தான் அணு ஆயுதம், மற்றும் ஏவுகணை திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த நாட்டின் ஏவுகணை திட்டங்களுக்கு உதவி செய்வதாக கூறப்படும் 7 நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஒபாமா அரசு அதிரடியாக பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் 7 நிறுவனங்களும் பாகிஸ்தான் அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

லாகூர் அஹாத் இன்டர்நேஷனல், வாஹ் கண்டோன்மென்ட் ஏர் வெப்பன்ஸ் காம்பிளக்ஸ், இஸ்லாமாபாத் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ், கராச்சி மெரிடைம் டெக்னாலஜி காம்ப்ளக்ஸ், இஸ்லாமாபாத் நேஷனல் என்ஜினீயரிங் அன்ட் சயின்டிபிக் கமிஷன், ராவல்பிண்டி நியூ ஆட்டோ என்ஜினீயரிங், சட்டார் யுனிவர்சல் டூலிங் சர்வீசஸ் ஆகிய 7 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிப்பதாக, அமெரிக்க வர்த்தக துறை நேற்று அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‘அமெரிக்க தேசிய பாதுகாப்பு அல்லது வெளிநாட்டு கொள்கை நலன்களுக்கு மாறாக செயல்படுவதாக கருதி, பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் ஏற்றுமதி நிர்வாக கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின் கீழ் கொண்டு வரப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘குறிப்பிட்ட உண்மைகள் அடிப்படையில் இந்த அரசு நிறுவனங்கள், அரசியல் அதிகாரத்தின்கீழ் நாட்டுக்காக மறைமுகமாக செயல்படும் பேரஸ்டடால் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு, வெளியுறவு கொள்கைக்கு மாறான செயல்பாடுகளில் தொடர்பு கொண்டுள்ளன என்று நம்புவதற்கு நியாயமான காரணம் உள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இந்த 7 நிறுவனங்களும் ‘இயர்’ என்றழைக்கப்படுகிற (அமெரிக்க) நிர்வாக கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின்கீழ் அனைத்து பொருட்களுக்கும் உரிமம் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply