உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் அடிக்கடி தங்கள் அலுவலக நேரத்தில் இருக்கையில் இல்லாமல் காணாமல் போவதாகவும், மதிய உணவிற்காக சிலர் வீட்டுக்கு சென்றுவிட்டு மிகவும் தாமதமாக அலுவலகத்திற்கு திரும்புவதாகவும் ஏராளமாக புகார்கள் வந்தன. இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்க முதல்வர் அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளார்.

இன்று முதல்வர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், பணி நேரத்தில் அரசு அலுவலர்கள் தங்கள் இருக்கையில் இல்லாவிட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார். மேலும் மதிய உணவிற்காக எந்த அரசு ஊழியரும் வீட்டிற்கு செல்லக்கூடாது என்றும், மதிய உணவிற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தனது எச்சரிக்கை அறிக்கையில் கூறியுள்ளார்.

எந்த அரசு ஊழியராவது பணி நேரத்தில் இல்லையென்றால் உடனே பொதுமக்கள் தனது தனிப்பட்ட எண்களுக்கு போன் செய்து புகார் அளிக்கலாம் என்றும் இதுகுறித்து ஊடகங்களும் தங்களது பங்களிப்பை அளிக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply