shadow

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவன நிர்வாக இயக்குனர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை
unitech
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான யுனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களான அஜய் சந்த்ரா மற்றும் சஞ்சய் சந்த்ரா ஆகிய இருவருக்கும் சண்டீகர் மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் முன்னணி நிறுவனமான யுனிடெக் நிறுவனம் டெல்லியை சேர்ந்த இரண்டு வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தியது தொடர்பான வழக்கு ஒன்றில் தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு துவாரகா நகரைச் சேர்ந்த வருண் பக்‌ஷி மற்றும் அவரது மனைவி ஷங்கா ஆகியோர் வீடு வாங்குவதற்காக 49.46 லட்ச ரூபாயை யுனிடெக் நிறுவனத்திடம் செலுத்தினார்கள். வீடு வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் படி இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த வீட்டை வழங்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் யுனிடெக் நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குள் வீடு ஒதுக்கீடு செய்யவில்லை. இதையடுத்து பக்‌ஷி மற்றும் ஷங்கா இருவரும் குறைதீர்ப்பு ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி குறைதீர்ப்பு ஆணையம், யுனிடெக் நிறுவனம் 49.46 லட்ச ரூபாயை திருப்பி கொடுக்கவும், இழப்பீடாக 3 லட்ச ரூபாயும் அது மட்டுமல்லாமல் வழக்கு செலவிற்கு 50,000 ரூபாயும் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதுவரை பணத்தை திருப்பி அளிக்காமல் காலதாமதப்படுத்திய யுனிடெக் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்களுக்கும் தலா 10,000 ரூபாய் அபராதம் மற்றும் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து யுனிடெக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது, ‘குறைதீர்ப்பு ஆணையம் கடந்த நவம்பர் மாதம் விதித்த உத்தரவின் படி 53 லட்ச ரூபாயை இரண்டு வாடிக்கையாளருக்கும் உடனடியாக வழங்க இருக்கிறோம். சனிக்கிழமைக்குள் அதாவது இன்றுக்குள் பணத்தை கொடுக்கவில்லை என்றால்தான் தண்டனை நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்

Leave a Reply