shadow

இரண்டு மாத மின்கட்டண முறை மாற்றப்படுமா? மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

ebஇரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்துவதால் அதிக கட்டணம் கட்ட வேண்டிய நிலை உள்ளதால் மாதம் ஒருமுறை மின் கட்டணம் கட்டும் முறையை கொண்டு வரவேண்டும் என்று விருதுநகர் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்தவர் வி.விக்னேஷ்ரகுராம் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘

தமிழகத்தில் தற்போது இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு முறை அமலில் உள்ளது. இரு மாத முறை மின் கணக்கீடு முறையில் கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளது. இதனால் பிற மாநிலத்தில் இருப்பது போல் தமிழகத்திலும் ஒரு மாத மின் கணக்கீடு முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீது நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணை செய்தது. அப்போது மின்வாரியம் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீமதி வாதிடும்போது, ”தமிழகத்தில் 2.50 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். இரு மாத மின் கணக்கீடு முறை 1987-ம் ஆண்டு முதல் படிப்படியாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. மின் கணக்கீட்டாளர்கள் யூனியன் வலியுறுத்தியதால் இரு மாத மின் கணக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. இந்த முறையால் மின் நுகர்வோர்களுக்கு இழப்பீடு இல்லை. ஒரு மாதக் கணக்கீட்டு முறையில் என்ன கட்டணம் வருமோ, அதில் இரு மடங்கு கட்டணம் மட்டுமே இரு மாத கணக்கீட்டு முறையில் வசூல் செய்யப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை” என்று வாதாடினார்.

இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் ‘மின் கட்டணம் வசூல் முறை அரசின் கொள்கை முடிவின் கீழ் வருகிறது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply