நாளை முதல் அமலுக்கு வரவுள்ள ரயில் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசு, ரயில்வே சரக்குக் கட்டணங்களை சில தினங்களுக்கு முன் உயர்த்தியதைத் தொடர்ந்து, மீண்டும் சரக்கு கட்டணத்தையும், பயணிகள் கட்டணத்தையும் உயர்த்த முடிவு செய்துள்ளது. பயணிகள் கட்டண உயர்வு, இந்நிலையில் பயணிகள் ரயில் கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

ரயில் கட்டணம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் என்பதை ஏற்க முடியாது. இந்த கட்டண உயர்வால் 1,150 கோடி நிதிச்சுமை மக்கள் மீது சுமத்தப்படும் “2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல்”, “நிலக்கரி ஊழல்”, “பாதுகாப்புத் துறை ஊழல்”, “காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதில் ஊழல்” என பல்வேறு ஊழல்கள் மூலம் இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட பல லட்சம் கோடி ரூபாய் இழப்பை தடுத்திருந்தாலே, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை தவிர்த்திருக்கலாம். நாட்டின் பொருளாதாரமும் சீரடைய வழி பிறந்திருக்கும்.

2012 ஆம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது, பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. பின்னர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக, இந்தக் கட்டண உயர்வினை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதனை மக்களவையில் அறிவித்த அப்போதைய ரயில்வே அமைச்சர், ஏற்கெனவே நிதிச் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்தக் கட்டண உயர்வை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். எனினும், 2013 ஆம் ஆண்டு, ரயில்வே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே, 22.1.2013 முதல் ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள சூழ்நிலையில், விலைவாசி விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில்; பண வீக்கம் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கின்ற சூழ்நிலையில்; மக்கள் மீது மத்திய அரசால் பல்வேறு சுமைகள் சுமத்தப்பட்டு இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில்; தற்போது ரயில் கட்டணங்களை மீண்டும் மத்திய அரசு உயர்த்தி இருப்பது எந்த விதத்தில் நியாயம்? மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஏழை, எளிய மக்களை பாதிக்கும். பயணிகள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply