எதிர்க்கட்சி மட்டுமின்றி காங்கிரசிலேயே எழுந்த எதிர்ப்பையடுத்து, தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏ.க்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை வாபஸ் பெற மத்திய அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்தது. இது தொடர்பான மசோதாவும் திரும்ப பெறப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. குற்ற வழக்குகளில் 2 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி உடனடியாக பறிபோய் விடும் என்று கடந்த ஜூலை 10ம் தேதி ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கு அனைத்து கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை காப்பாற்றவும் உச்ச நீதிமன்ற உத்தரவை செல்லாததாக்கவும் சட்ட திருத்த மசோதா கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்னைகளால் எழுந்த அமளி காரணமாக நாடாளுமன்றம் முடங்கியதால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்கள் செய்து அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, கடந்த 26ம் தேதி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அவசர சட்டம் கொண்டு வர பா.ஜ. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு ஒப்புதல் அளிக்க கூடாது என்று ஜனாதிபதி பிரணாபிடம் பா.ஜ. தலைவர்கள் மனு அளித்தனர். சமாஜ்வாடி உள்ளிட்ட சில கட்சிகளும் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கோரி தன்னை சந்தித்த மத்திய அமைச்சர்கள் சுசில் குமார் ஷிண்டே, கபில் சிபல், கமல் நாத் ஆகியோரிடம் அவசர சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பும் வரை காத்திருக்க ஜனாதிபதி முடிவு செய்தார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியே இந்த சட்டத்தைத கடுமையாக எதிர்த்தார். ‘அவசர சட்டம் கொண்டு வருவது முட்டாள்தனமானது. அதை கிழித்து எறிய வேண்டும்’ என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே, காங்கிரஸ் தலைவர்களும் ராகுலின் கருத்துதான் எங்கள் கொள்கை என்று மாறினர்.

ராகுலின் கருத்தால் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தியடைந்ததாக செய்திகள் வெளியானது. அவரை சமாதானப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி அவருக்கு கடிதம் எழுதினார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு மன்மோகன் நாடு திரும்பினார்.

நேற்று காலை முதலே டெல்லியில் பரபரப்பு தொற்றி கொண்டது. பிரதமரை அவரது வீட்டில் ராகுல் காந்தி சென்று பார்த்தார்.

அவசர சட்டம் கொண்டு வர வேண்டியதன் சூழல் குறித்து பிரதமரும் ராகுலிடம் விளக்கினார். இதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் பிரதமர் வீட்டில் காங்கிரஸ் உயர் நிலை குழு கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் அவசர சட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் பகல் 12.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகைக்கு பிரதமர் மன்மோகன் சென்றார். அவசர சட்டத்தை வாபஸ் பெற எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் அமைச்சரவையும் இது பற்றி முடிவை அறிவிக்கும் என்றும் ஜனாதிபதி பிரணாபிடம் மன்மோகன் தெரிவித்தார். பிற்பகலில், கூட்டணி கட்சி தலைவர்களான சரத்பவார், அஜித் சிங் உள்ளிட்டோரிடம் அவசர சட்டம் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார். பின்னர், அரசு அட்டர்னி ஜெனரல் வாஹன்வதியை அழைத்து பிரதமர் ஆலோசித்தார்.

மாலை 6 மணிக்கு பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பான மசோதாவை திரும்ப பெறவும் முடிவு செய்யப்பட்டது. 20 நிமிடங்கள் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பின், தகவல் ஒளிபரப்பு அமைச்சர் மணீஷ் திவாரி கூறியதாவது:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்கள் செய்து கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை வாபஸ் பெற மத்திய அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மசோதாவை திரும்ப பெறவும் அமைச்சரவை முடிவு செய்தது. மசோதாவை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அவசர சட்டம் தொடர்பாக பரவலான எழுந்த எதிர்விளைவுகள் அடிப்படையில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கள் காரணமாக அரசு தனது முடிவை மறுபரிசீனை செய்தது. அவசர சட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்ததன் மூலம் மக்கள் விருப்பத்தின்படியே அரசு செயல்படுகிறது என்பதை காட்டுகிறது. இவ்வாறு மணீஷ் திவாரி கூறினார்.

Leave a Reply