சென்னையில் “பாலியல் மற்றும் சட்டம்” என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் பாலியல் தொழில்புரியும் பெண்களுக்காக பணியாற்றி வரும் 16 சமூக சார்ந்த அமைப்புகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

இந்த கருத்தரங்கில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்முறைகளில் இருந்து காக்கும் சட்ட திருத்தம், பணியிடங்களில் சந்திக்கின்ற பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம், குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டம், ஆள்கடத்தல் தடை சட்டம் போன்ற முக்கிய சட்டத்திருத்தங்கள் குறித்த தகவல்கள் மற்றும் பயன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில், அகில இந்திய பாலியல் தொழில் செய்யும் பெண்கள் சங்கத்தின் செயலாளர் குசும் மற்றும் பிரசார செயலாளர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்று பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இதில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த சில சம்பவங்களையும், சட்டம் குறித்த விழிப்புணர்வு இருந்த காரணத்தினால் அந்த சூழ்நிலைகளை எவ்வாறு சட்டத்தின் உதவியுடன் எதிர்கொண்டார்கள் என்பது குறித்தும் பேசினார்கள்.

பின்னர் நிருபர்களிடம் இந்திரா பெண் முன்மாதிரி கல்வியாளர்கள் சங்க செயலாளர் கே.கலைவாணி கூறியது:-

“நாங்கள் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு எதிராக பணிபுரிந்து வருகிறோம். பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு உட்படுத்துவதை கடுமையாக எதிர்த்து, அதற்கான ஆலோசனைகளையும், சேவைகளையும் செய்து வருகிறோம்.

இத்துன்பங்களுக்கு எதிராகவும், பாலியல் தொழில் புரியும் பெண்களுக்காகவும் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான ஒரு இடத்தை ஏற்படுத்தி தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறு ஒரு இடத்தை ஒதுக்கி தருவதால் சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தடுக்க முடியும். சிறுவர்களை பாலியல் தொழிலில் இருந்து மீட்டு மறுவாழ்விற்கு உதவி செய்ய முடியும். விருப்பம் இல்லாத பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களின் மறுவாழ்விற்கு உதவி செய்ய முடியும்.

பால்வினை நோய் மற்றும் எச்.ஐ.வி. (எய்ட்ஸ்) விழிப்புணர்வு ஏற்படுத்தி எய்ட்ஸ் தாக்கத்தை குறைக்க முடியும். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைத்திட வழிவகை செய்ய முடியும். இவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதை தடுக்க முடியும்.

சிறுவர்கள் மற்றும் பெண்களை கடத்துவதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி மனித கடத்தலை தடுக்க முடியும். பாதுகாப்பான இடம் ஒதுக்கப்பட்டால், அந்த இடத்திற்கு வந்து மறைமுகமாக பாலியல் தொழில் புரியும் பெண்களுக்கு மருத்துவ சேவை மற்றும் பல்வேறு திட்டங்கள் எளிதில் அவர்கள் பெற்று கொள்ள ஏதுவாக இருக்கும்.

தற்போது சென்னையில் பாதுகாப்பான தனி இடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறோம். பின்னர் மற்ற மாவட்டங்களில் இருக்கும் அமைப்புகளுடன் கலந்து பேசி பின்னர் முடிவு எடுப்போம். இதுகுறித்து ஏற்கனவே முதலமைச்சர் அவர்களுக்கு மனு அனுப்பியுள்ளோம்” இவ்வாறு கலைவாணி கூறினார்.

Leave a Reply