கோடையில் தாக்கும் நோய்களும் தவிர்க்கும் வழிகளும்

67dfa7ef-0130-4baa-9845-e804d4d34602_S_secvpf

கோடை காலம் தொடங்கிவிட்டது. கொளுத்தும் வெயில், எங்கு பார்த்தாலும் ஜுரம். இது தவிர பல விதமான பாதிப்புகள் கோடையில் ஏற்படுகின்றது. அவை என்னென்ன, எப்படி தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதனை அறிவோம்.

சிக்கன் பாக்ஸ்:

சிக்கன் பாக்ஸ் எனப்படும் இந்த சின்ன அம்மை நோய் பாதிப்பு வைரஸ் கிருமியால் ஏற்படுகின்றது. உடலில் சிவந்த அரிக்கும் தடிப்புகள், கொப்பளங்கள் என பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த அம்மை அனேகமாக குழந்தைகளையே பாதிக்கின்றது. காற்றின் மூலம் பரவும் இந்த வைரஸ் கிருமி பாதிக்கப்பட்ட நபர் இருமுவது, தும்முவதன் மூலம் பரவுகின்றது.

பாதிக்கப்பட்டவரை ஒருவர் தொடுவதன் மூலமும் மற்றவருக்கு ஏற்படுகின்றது. ஜுரம், தலைவலி, தொண்டை வலி என ஆரம்பித்து இரண்டொரு நாட்களில் உடலில் அறிகுறிகளை ஏற்படுத்தும். கொப்பளங்கள் காய்ந்து உதிர இரண்டு வாரங்கள் ஆகின்றது. ஒருமுறை இந்த பாதிப்பு வந்தவருக்கு மறுமுறை இந்த பாதிப்பு வராது. வராமல் தடுக்க இதற்கு வாக்சின்கள் (தடுப்பு மருந்து) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுவில் இந்த பாதிப்பு உடையவரின் உடன் இருப்பவர்கள் அல்லது பார்க்கச் செல்பவர்கள் கைகளை நன்கு சோப்பு கொண்டு சுத்தம் செய்தாலே போதும். நல்ல பலன் கிடைக்கும். இதுபோன்று ஏற்படும் சிலவகை அம்மை பாதிப்புகள் ஆரம்ப கால அறிகுறியாக ஜுரம், இருமல், கொட்டும் மூக்கு, தொண்டை வலி, சிவந்த கண் என்ற அறிகுறிகளுடன் இருக்கும். தடுப்பு நிவாரணமாக குழந்தைகளுக்கு எம்.எம்.ஆர். வாக்சின் அளிப்பது சிறந்த பலன் தரும்.

மஞ்சள் காமாலை:

இதில் ‘ஏ’ வகை பிரிவே இந்த கோடையில் சர்வ சாதாரணமாகக் காணப்படும் ஒன்றாக இருக்கின்றது. இது சுகாதாரமற்ற தண்ணீர் மூலம் பரவுகின்றது. உடல், கண்ணில் மஞ்சள் நிறம், வெளிர் நிற வெளிப் போக்கு, அரிக்கும் தோல், அடர்ந்த நிற சிறு நீர் என்ற அறிகுறிகளுடன் இது ஆரம்பிக்கும். இதற்கு வாக்சின் இருக்கின்றது என்றாலும் சுத்தமான குடிநீர், சுத்தமான உணவு மட்டுமே இதற்கு பாதுகாப்பு தீர்வு.

டைபாய்டு:

சுகாதாரமற்ற நீரே இதற்கு முதல் காரணம். ஜுரம், சோர்வு, வயிற்று வலி, தலைவலி, பசியின்மை சில சமயம் உடலில் தடிப்பு போன்றவை ஏற்படும். இதற்காக சிகிச்சை பெறுபவருக்கு காய்ச்சல் சரியானாலும் இந்த பாக்டீரியா அவருக்குள் இருந்து பலருக்குப் பரவலாம். இந்நோய் பல உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.

* சுகாதாரம் மிகமிக முக்கியம்.

* அடிக்கடி கைகளை சோப் கொண்டு கழுவுங்கள்.

* சூடான, அப்பொழுது சமைத்த உணவுகளை உண்ணுங்கள்.

மம்ஸ் எனப்படும் பொன்னுக்கு வீங்கி:

கழுத்தில் வீக்கமாக காணப்படும் இந்த பாதிப்பு ஜுரம், தலைவலி, உடல்வலி, பசியின்மை, சோர்வு போன்ற அறிகுறிகளுடன் காணப்படும். குழந்தைகளுக்கு இதற்கான வாக்சின் பரிந்துரைக்கப்படுகின்றது.

இருமல்:

எப்போதும் ஐஸ் தண்ணீர், ஜில்லென்று குளிர்பானம் குடிப்போருக்கு பல வகை கிருமி பாதிப்பு, தொண்டைக் கட்டு, இருமல் போன்றவை இருக்கும். ஐஸ் பானங்களை தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு.

சரும பாதிப்பு:

இது அனைவருக்கும் நிகழும் ஒன்று. வியர்வையும் அதில் கிருமிகள் சேர்வதுமே இதற்குக் காரணம். தரமான சோப் குளியலும், சுத்தமான பருத்தி ஆடை, உள்ளாடை மிக அவசியம். ‘உணவு விஷ’ பாதிப்பினால் வயிற்றுப் போக்கு, வாந்தி இவற்றின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை கோடை காலத்தில் அதிகமாக உள்ளது.

இதற்கு சுகாதாரமற்ற நீர், உணவு இரண்டுமே காரணமாகும். இந்த பாதிப்பு வயிறு வீக்கம், நரம்பு பாதிப்பு வரைகூட கொண்டு விடும். உடலில் நீர் வற்றும் தன்மை ஆபத்தில் கொண்டு விட்டு விடும் என்பதால் இவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்றது.

ஹீட் ஸ்ரோக் எனப்படும் அதிக வெய்யில் பாதிப்பு:

இது ஒருவரை கொன்று கூடவிடும். அதிக நேரம் அதிக வெய்யிலில் அடிக்கடி இருப்பவருக்கு இப்பாதிப்பு ஏற்படும். வாந்தி, வயிற்றுப் பிரட்டல், வலிப்பு, குழப்பம், நினைவின்மை போன்றவை ஏற்படும். இதன் முதல் அறிகுறி பாதிக்கப்பட்டவர் மிகவும் ரூடாக உணர்வார். அதிக தலைவலி, படபடப்பு இருக்கும். அவர் உடைகளை தளர்த்தி குளுமையான இடத்திற்கு நகர்த்தி, உடல் முகத்தினை ஈரப்படுத்துவதே முதலுதவி என்றாலும் அவசர மருத்துவ சிகிச்சையே இவர்களை காப்பாற்றும்.

சூரிய எரிப்பு:

சன்பர்ன் எனப்படும் இந்த சரும பாதிப்பு அதிக நேரம் வெய்யிலில் இருப்பவர்களுக்கு ஏற்படும். இவர்களுக்கு சருமம் சிவந்து, தடித்து, இருப்பதுடன் ஜுரம் மற்றும் சில்லிடுவது, வாந்தி, உடலில் கொப்பளங்கள் தோன்றும். பலர் மயக்கம் அடைவர். இவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவ சிகிச்சை அவசியம்.

பகல் 10 மணி முதல் 2 மணி வரை வெயிலில் இல்லாமல் இருப்பது பாதிப்பை மிகவும் குறைக்கும். சன் ஸ்க்ரீன் லோஷன், கறுப்பு கண்ணாடி, குடை, தொப்பி, காலில் தகுந்த செருப்பு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது தண்ணீர் குடித்தல் போன்றவை சிறந்த பாதுகாப்பாக அமையும்.

ப்ளூ:

பிறரை எளிதாய் தொற்றிக் கொள்ளும் சுவாச உறுப்பு பாதிப்பு. இதற்கான வாக்சின் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாதவர்களுக்கு இந்த பாதிப்பு ஆபத்தாக முடியலாம். ஜுரம், சில்லிப்பு, தொண்டை பாதிப்பு, மூக்கடைப்பு, உடல் வலி, தலைவலி, சோர்வு இவை இதன் அறிகுறிகள். ஐஸ் நீர், குளிர்பானம், எண்ணெய் உணவு போன்றவை இதன் பாதிப்பிற்கு காரணம்.

Leave a Reply

Your email address will not be published.