தமிழக காவல்துறை எச்சரிக்கை

இனி 144 தடை உத்தரவு மீறி, 5 நபர்களுக்கு மேல், எந்த இடத்திலும் எவ்வித காரணங்களுக்காகவும் பொதுமக்கள் கூடினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது

தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நமது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கொடிய கொரோனா தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தமிழகம் முழுவதும் 144 குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு, அரசு நிர்வாகம் பல நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கப் பொதுமக்களுக்குத் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வந்துள்ளது.

144 தடை உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்ட பிறகும், பொதுமக்களில் பலர் அதன் சட்ட விதிமுறைகளைச் சரிவரக் கடைப்பிடிக்காமலும், சமூக இடைவெளியைத் தவிர்த்தும், உத்தரவுகளை மீறிச் செயல்பட்டு வருகின்றனர். இத்தடை உத்தரவுப்படி ஐந்து நபர்களுக்கு மேல் எந்த இடத்திலும் எக்காரணத்திற்காகவும் கூடுவது சட்ட விரோதமானது. இச்சட்டம் அனைத்து சமூக, சமய மற்றும் மதம் சார்ந்த விழாக்கள், வழிபாடுகள் மற்றும் கூட்டங்களுக்கும் முழுமையாகப் பொருந்தும். ஆகவே பொதுமக்கள் 144 தடை உத்தரவு நடைமுறைகளை எக்காரணம் கொண்டும் மீறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழகக் காவல்துறை மீண்டும் வலியுறுத்துகிறது.

இனி 144 தடை உத்தரவு மீறி, ஐந்து நபர்களுக்கு மேல், எந்த இடத்திலும் எவ்வித காரணங்களுக்காகவும் பொதுமக்கள் கூடினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
ஆகவே பொதுமக்கள் சட்டவிதிகளை மீறுவதைத் தவிர்த்து, இக்கொடிய தொற்று நோயை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குத் தமிழக காவல்துறையினருடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *