shadow

பொதுமக்களின் குறைதீர்க்க 1100 கட்டணமில்லா சேவை. முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
amma
பல்வேறு சேவைகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் வைக்கப்பட்டுள்ளதுபோல் தற்போது தமிழக அரசும் பொதுமக்களின் குறைகளை விரைவில் போக்கிட 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலம் தொடர்பு கொள்ளும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள குறைதீர் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது, “ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் அரசிற்கு தங்கள் குறைகளைத் தெரிவித்து உரிய தீர்வு பெறும் நோக்கத்துடன் முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.

இப்பிரிவின் மூலம் நேரடியாகவும், அஞ்சல் வழியாகவும், முதலமைச்சரின் தனிப் பிரிவின் வலைதளம் மூலமாகவும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் குறைகளை விரைந்து பெற்று, அதனைக் களைந்திடும் நோக்கில், கணினிவழி தொலைபேசி அழைப்பு ஒருங்கிணைத்தல் (குரல் பதிவு மற்றும் பிரித்தறிதல் போன்ற புதிய தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன், 24/7 மணிநேரமும் செயல்படும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலம் எங்கிருந்தும், எப்போதும் பொது மக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் “அம்மா அழைப்பு மையம்” அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15,000 அழைப்புகளை ஏற்கும் வகையில், 138 அழைப்பு ஏற்பாளர்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்ப அழைப்பு ஏற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

முதல்வரால் இன்று துவக்கி வைக்கப்பட்ட இந்த மையத்தின் மூலம், பொது மக்களிடமிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் விவரம், குறைகள் ஆகியவை கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படும்” என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply