shadow

தமிழகத்தில் பொதுத்தேர்தல் எப்போது? தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
election
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்தில் அசாதாரண நிலை இருப்பதாகவும், எனவே தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் ஒருசில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்தல் எப்போது என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வெள்ளம் காரணமாக வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்கள், மாற்று அட்டை கோரி வருகின்றனர். சென்னையில் 1950 என்ற தொலைபேசி எண் மூலம் 3 ஆயிரம் பேரும், நேரடியாக 6,500 பேரும் என மொத்தம் 9,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். காஞ்சிபுரத்தில் 3,224 பேர், திருவள்ளூரில் 300 பேர், கடலூரில் 1,934 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு சார்பில் மனுக்கள் பெறும் முகாம் வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது.விண்ணப்பித்தவர் களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் வீடு வீடாக சென்று வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்காக பிஹார், குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து 75 ஆயிரம் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழகத்துக்கு கொண்டுவர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அவை விரைவில் கொண்டு வரப்படும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி உள்ளிட்ட 3 ஆணையர்களும் சமீபத்தில் மேற்கு வங்கத்துக்கு சென்று அம்மாநில சட்டப் பேரவை பொதுத்தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இன்று  அசாம் சென்றுள்ளனர். அடுத்தகட்டமாக தமிழகம், கேரளம், புதுச்சேரிக்கு வர உள்ளனர். ஜனவரி இறுதியில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்படுகிறது. அதன்பிறகு அவர்கள் தமிழகம் வர வாய்ப்புள்ளது. இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

Leave a Reply