திருப்பதி கோயில் தங்கத் தேர் வெள்ளோட்டத்தில், சக்கரங்கள் மண்ணில் புதைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவம், ரத சப்தமி உள்ளிட்ட முக்கிய நாட்களில், தங்கத் தேரில் மாடவீதிகளில் சுவாமி வலம் வருவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. பழைய தேர் பழுதடைந்திருப்பதால், அதற்கு பதிலாக 24 கோடி செலவில் புதிய தங்கத் தேர் செய்யும் பணி, கடந்த 6 மாதங்களுக்கு முன் தொடங்கியது.இதற்காக, தேவஸ்தான கருவூலத்தில் இருந்து 74 கிலோ தங்கம், 2,900 கிலோ செம்பு, 25 டன் மரம் பயன்படுத்தப்பட்டது. இந்த பணியில் நன்கு தேர்ச்சிப் பெற்றதாக கருதப்படும் மதுரை, சுவாமிமலை, கும்பகோணத்தைச் சேர்ந்த கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், தங்கத் தேர் செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. நேற்று மாடவீதிகளில் தேர் வெள்ளோட்டம் நடத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. இதை பார்ப்பதற்காக பக்தர்கள், நேற்று காலையில் அருங்காட்சியகம் மற்றும் மாடவீதிகளில் காத்திருந்தனர்.காலை 9.15 மணியளவில், தங்கத் தேரில் ஏழுமலையான் படம் வைத்து கொண்டு வந்தனர்.

முன்னதாக, தேருக்கு எவ்வித பூஜைகளும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. தங்கத் தேர் வெளியே வந்தவுடன் பக்தர்கள், “கோவிந்தா, கோவிந்தா” என்று கோஷமிட்டனர்.சுமார் 50 அடி தூரம் தேர் வந்தபோது, அருங்காட்சியகம் மாடவீதி இணைப்பு சாலையிலுள்ள மண்ணில் திடீரென வலது பக்க சக்கரம் புதைந்தது. இதனால் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டது. சுமார் ஒன்றரை மணிநேரம் போராடி தேர்ச் சக்கரத்தை நகர்த்தினர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தேரின் இடதுபுற சக்கரமும் மண்ணில் புதைந்தது. இதனால் செய்வதறியாமல் அனைவரும் திகைத்தனர். பின்னர், ஒருவழியாக இடதுபுற சக்கரத்தையும் மீட்டனர். மீண்டும் தேர்ச் சக்கரம் மண்ணில் புதையும் நிலை இருப்பதால் வெள்ளோட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய தேர் மாடவீதிக்கு வரும் முன்னரே சக்கரங்கள் அடுத்தடுத்து மண்ணில் புதைந்தது, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply