தேசியக் கொடியை ஏந்திச் சென்ற குற்றத்திற்காக குமாரசாமி என்ற 28 வயது இளைஞர் போலீசாரால் தாக்கப்பட்டு ரத்தம் சிந்தி உயிரைவிட்டார். இது நடந்தது திருப்பூரில்.

இளம் மனைவியைத் தவிக்கச் செய்து உயிர்த்தியாகம் செய்த குமாரசாமியை ‘கொடிகாத்த குமரன்’ என்று தமிழ்மக்கள் சொந்தம் கொண்டாடினார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை என்ற ஊரில்(4.10.1904)பிறந்தவர் குமரன்; செங்குந்தர் மரபைச் சேர்ந்தவர். ஏழைக்குடும்பத்தில் குமரனோடு பிறந்தவர்கள் ஆறுபேர்.

‘சொந்தத்தில் திருமணம் நடந்தால் குடும்பத்திற்கு ஒரு ரூபாய் வீதம் மொய் வைக்கவேண்டும்’ என்ற வழக்கம் சென்னிமலை செங்குந்தர்களிடம் இருந்தது. 1922 இல் ஒரே நேரத்தில் 63 திருமணங்கள் வந்ததில் மொய் வைக்கக் காசில்லாமல் ஊரைவிட்டு புறப்பட்டார் குமரன்; திருப்பூர் வந்த குமரன் பஞ்சுக் கம்பெனியில் குமாஸ்தாவாக சேர்ந்தார்; ‘ராமாயி’ என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

குமரனுக்கு தேசத்திடமும் தெய்வத்திடமும் ஈடுபாடு அதிகம். தினமும் திருக்குறளும் திருவாசகமும் படிப்பார். எப்போதும் கதர்த்துணிகளையே அணிவார்.

ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொள்ள விரும்பினார் குமரன். சூழ்நிலை அவரைத் தடுத்துவிட்டது. அவருக்கு ஏகப்பட்ட வருத்தம்.

பின்னர் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். மறியலுக்குப் போகும்போது பக்கத்துவீட்டு தையல்காரரின் ஐந்துவயது பையனையும் அழைத்துபோவார். கடைக்கு வருவோரின் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவான் அந்தச் சிறுவன். அவன் பிடியிலிருந்து தப்புவதே பெரும்பாடாயிருக்கும்.

கள்ளுக்கடைக்காரர் பட்டாசைக் கொளுத்தி குமரன் முகத்தில் வீசினார். முகமெல்லாம் புண்ணாக ஆன நிலையிலும் குமரனின் உறுதி குலையவில்லை.

அப்போது மகாத்மா காந்தி கைது செய்யப்படுகிறார். (04.01.1932.) செய்தி கேட்டவுடன் மக்கள் வெகுண்டெழுந்தார்கள். திருப்பூரிலும் மற்ற இடங்களிலும் சட்ட மறுப்பு நடவடிக்கைகள் சூடுபிடித்தன.

குமரன் சட்டமறுப்பு போராட்டத்திற்குத் தயாராகிறார். உறவினர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். குமரன் ஒரே எண்ணத்துடன் இருக்கிறார். யாருக்கும் பாக்கி இருக்கக்கூடாது என்று கடன் கொடுத்தவர்களை எல்லாம் சந்தித்துக் கடனை தீர்த்து விடுகிறார்.

திருப்பூரின் முக்கிய வீதிகளில் ரிசர்வ் போலீஸ் அணிவகுப்பு நடைபெறுகிறது. போராட்ட நாளான ஜனவரி 10 அன்று காலை 6 மணிக்கே திருப்பூர் தேசபந்து வாலிப சங்க உறுப்பினர்கள் 9 பேர் தலைவர் ஈசுவர மூர்த்தியின் வீட்டு வாசலில் அணிவகுத்து நிற்கின்றனர். அதில் குமரனும் ஒருவர். போலீஸ் கொடுமைக்குப் பயந்து ஈசுவரமூர்த்தி போராட்டத்திற்கு வரமறுத்துவிடுகிறார். பி.எஸ். சுந்தரம் என்ற தொண்டர் தலைமையேற்கிறார்.

1. குமரன்
2. ராமன் நாயர்
3. பொங்காளி முதளியார்
4. நாச்சிமுத்து செட்டியார்
5. விஸ்வநாத நாயர்
6. சுப்பராயன்
7. நாச்சிமுத்து கவுண்டர்
8. நாராயணன்
9. சிறுவன் அப்புக்குட்டி

என்ற தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்

குமரனிடம் தலைவர் மூவர்ணக் கொடியைக் கொடுக்கிறார். ‘மகாத்மா காந்திக்கு ஜே! வந்தே மாதரம்!’ என்று கோஷமிட்டபடியே தொண்டர்கள் நடக்கிறார்கள்.

திருப்பூர் மங்கள் விலாஸ் மாளிகை அருகே ஊர்வலம் வந்தபோது தொண்டர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகம் இடப்படுகிறது.

திருப்பூர் நகர போலீஸ் ஸ்டேஷன் அருகில் இன்ஸ்பெக்டர் முகமது மற்றும் ஒரு அதிகாரியும் தொண்டர்களை வழிமறித்து எச்சரிக்கிறார்கள். தடியடி நடக்கும் என்று மிரட்டுகிறார்கள்.

தொண்டர்கள் உரத்த குரலில் கோஷமிடுகிறார்கள். முப்பது போலீஸ்காரர்கள் தொண்டர்களைச் சுற்றி வளைத்து தாக்குகிறார்கள். இன்ஸ்பெக்டர் முகமது ‘இந்த வாய்தானே வந்தேமாதரம் சொன்னது’ என்று குமரனின் முகத்தில் அடிக்கிறார்.

போலீசார் குமரனின் கையில் இருக்கும் கொடியைப் பிடுங்க முயற்சி செய்கிறார்கள். மீண்டும் மீண்டும் குமரன் தாக்கப்படுகிறார். குமரனின் இடது காதுக்கு நேராக மண்டை பிளந்து ரத்தம் கொட்டுகிறது. ஆனால் அவர் ‘வந்தே மாதரம்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். வலக்கரம் மூவர்ணக் கொடியை உறுதியாகப் பிடித்திருக்கிறது. குருதி வெள்ளத்தில் குமரன் கீழே சாய்கிறார். ராமன் நாயருக்கும் பலத்த அடி. அவரும் கீழே விழுந்து விடுகிறார்.

இன்ஸ்பெக்டர் முகம்மது பி.எஸ் சுந்தரத்தின் மீது பாய்கிறார்; லத்தியால் அடித்து கை, கால் எலும்புகளை உடைக்கிறார்.

குமரன், சுந்தரம், ராமன் நாயர் மூவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.
மறுநாள் (11.01.1932) அதிகாலை 5 மணிக்கு குமரனின் உடலைவிட்டு உயிர் பிரிந்துவிடுகிறது.

’என் உயிர் போய்விடும்; நீ புத்தியாகப் பிழைத்துக்கொள்’ என்று மனைவி ராமாயிடம் சொன்னதுதான் அவருடைய கடைசி வார்த்தை.

குமரன் சிந்தியரத்தம் தாய்மண்ணில் கலந்துவிட்டது.

Leave a Reply