shadow

10 மாதங்களாக சமையலறையில் முடக்கப்பட்டேன். இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் பரபரப்பு பேட்டி
imrankhan
பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாஃப் என்ற கட்சியின் தலைவருமான இம்ரான்கானின் இரண்டாவது மனைவி கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்து பெற்றார். திருமணம் ஆகி பத்தே மாதங்களில் இம்ரான்கானை விவாகரத்து செய்ததன் காரணம் குறித்து ரேஹம் கான் சமீபத்தில் தி சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் ரேஹம்கான் கூறியதாவது:

திருமணத்துக்குப் பின் ஒரு மூத்த ஆலோசகர் எனக்கு அறிவுரை வழங்கினார். அதன்படி, நான் சமையலறையில்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு சப்பாத்தி செய்து கொடுக்க வேண்டும். வேறெங்கும் நான் தென்படக்கூடாது என கூறினர்.

நானும் எனது இளைய மகளும், இம்ரான் கானின் பானிகலா மலைவீட்டுக்குச் சென்று தங்கினோம். அப்போது நான் முடக்கப்பட்டதாக உணர்ந்தேன். நான் பெஷாவரில் உள்ள தெருக் குழந்தைகளுக்கான தூதரான போது தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டன. நான் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. பாதுகாப்பற்று உணர்ந்தேன்.

முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க தொலைக்காட்சி பணியைத் துறந்தேன், சில மாதங்கள் வேலையே செய்யவில்லை. ஆனாலும், ஒரு பத்திரிகை பேட்டியில், எனது முதல் திருமணம் தொடர்பான கேள்வியெழுப்பப்பட்டபோது பிரச்சினை எழுந்தது.

குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டீர்களா என்ற கேள்விக்கு பொய் சொல்ல விரும்பவில்லை. ஆம். ஓர் அரசியல்வாதியின் மனைவியாக ராஜ தந்திரத்துடன் பதில் தெரிவித்தேன்.

ஆனால், ஊடகத்தால் பிரச்சினை எழுந்தபோது, இம்ரான் மவுனம் சாதித்தார். நான் என்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டேன். எனது கடந்த காலம் பற்றி இம்ரானுக்குத் தெரியும் என்றபோதும் தாக்குதல்கள் அதிகரித்தன.

பெஷாவரில் தெருக்குழந்தைகளுக்காக தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். மேலும் இரு திரைப்படங்களை தயாரிக்கவிருக்கிறேன். என்னைக் காதலிப்பதாகக் கூறிய, தனியாக இருந்த ஒருவரை நான் திருமணம் செய்து கொண்டேன். அவருக்கும் எனக்கும் வாழ்க்கை குறித்து ஒரே பார்வை, ஒரே லட்சியம் இருந்ததாக நினைத்தேன். ஆனால், நாங்கள் இருவரும் முற்றிலும் வெவ்வேறானவர்கள். இவ்வாறு ரேஹம் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply