திருப்பூர் மாவட்டம் காங்கயம்- கோவை சாலையில் இல்லியம்புதூர் என்ற கிராமத்துக்கு அருகே மகாராஜா நவீன அரிசி ஆலை உள்ளது. இங்குள்ள வியாபாரிகள் சிவன்மலை தேசிய வங்கியில் பணம் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை அரிசி ஆலையிலிருந்து ரூ.22 லட்சத்தை எடுத்துக்கொண்டு, மகாராஜா நிறுவன மேலாளர் வரதராஜன்(33), கார் ஓட்டுநர் பாலகிருஷ்ணன்(31) ஆகியோர் வங்கியில் செலுத்த காரில் சென்றனர். எருக்களாம்பட்டிபுதூர் அருகே செல்லும்போது இரண்டு கார்களை சாலையை மறித்து நிறுத்தி ஒரு கும்பல் கார்களை சரிசெய்வதுபோல் பாவனை செய்துள்ளது. அப்போது, ஓட்டுநர் பாலகிருஷ்ணன் ஒலி எழுப்பி வழிவிடுமாறு கேட்டுள்ளார். உடனே, அந்த கும்பல், வரத ராஜன் சென்ற காரின் கண்ணாடியை உடைத்து உருட்டுக்கட்டையால் இருவரையும் தாக்கி காரில் இருந்த ரூ. 22 லட்சத்தை எடுத்துக்கொண்டு இரண்டு காரில் தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் நடைபெற்ற இரண்டு மணி நேரத்திற்குள்ளாக பல்லடம் அருகே செட்டிபாளையம் செல்லும் சாலையில் கே.அய்யம்பாளையம் பகுதியில் கொள்ளையர்கள் சென்ற ஒரு கார் சாலையில் சறுக்கி நின்றதாகத் தெரிகிறது. உடனே, அவர்கள் காரிலிருந்து இறங்கி பணத்தோடு தப்பித்து ஓட முயன்றுள்ளனர்.
சந்தேகமடைந்த அந்தப் பகுதியினர் காவல்துறைக்கு தகவல் தந்துள்ளனர். அதில், இருவர் பிடிபட்டனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.