கடந்த இரண்டு வாரங்களாக நீலகிரி மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த புலியை துப்பாக்கியால் சுட்டு கொன்று பொதுமக்களின் மனதில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளனர் தமிழக வனத்துறையினர்.
கடந்த இரண்டு வாரங்களாக நிலகிரி மாவட்டத்தின் குந்தசப்பை என்னும் பகுதியில் ஒரு புலி அட்டகாசம் செய்து வந்தது. அந்த புலி தாக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இரண்டு பசுமாடுகளும் பலியானதால், அந்த புலியை சுட்டுக்கொல்ல தமிழக வனத்துறையினர் முடிவு செய்தனர். இந்த புலியை தேடும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. வனத்துறை மற்றும் அதிரடிப்படையினர் கிராம மக்களுடன் இணைந்து புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நேற்று மாலை புலியின் நடமாட்டத்தை கண்டுபிடித்த தமிழக வனத்துறையினர் அந்த புலியை துப்பாக்கியால் சுட்டனர். முதல் முறை துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிய புலி இரண்டாவது தாக்குதலுக்கு பலியானது. புலி கொல்லப்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த புலியின் தொடர் அட்டகாசம் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இனி எப்போதும்போல பள்ளி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.