shadow

11

சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ளது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில். இங்கு அருள்பாலிக்கும் இறைவனின் திருநாமம் கபாலீசுவரர், இறைவி கற்பகாம்பாள். மயிலையில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.தேவாரத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

காபலீஸ்வரர் பெயரும் விளக்கமும்: ஆதியில் பிரம்மனுக்குத் துணையாக இருந்து இந்த உலகைத் திறம்பட படைத்து, நடத்தவும், காத் நிற்கவும் சிவபெருமான் நூறு ருத்திரர்களைப் படைத்தார். இவர்களை சதருத்திரர்கள் என்று புராணங்கள் போற்றுகின்றன. இவர்கள் பத்து பத்து பேர்கள் கொண்ட குழுவாக எட்டுத் திசைகளிலும் வானத்திலும் பாதாளத்திலுமாக பத்துத் திசைகளிலிருந்து இவ்வுலகைக் காத்து வருகின்றனர். இவர்களில் கிழக்குத் திசையில் இருந்து காவல் புரிந்துவரும் பத்துபேர் கொண்ட குழுவிற்குத் தலைவனாக இருப்பவனது பெயர் கபாலீசன் என்பதாகும்.
கபாலீசனாகிய ருத்திரன், தனது தலைவனாகிற சிவபெருமானைப் போற்றும் வகையில், கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைத்து, தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டான். அந்த லிங்கம் அவன் பெயரால் கபாலீசுவர என்று அழைக்கப்படுகிறது.

உமாதேவி சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட, அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் , “நீ பூலோகத்தில் மயில் உருப்பெற்றிடுவாய்’ என சாபமிட்டார். “சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய்’ எனக் கூறினார்.

அவ்வாறே இத்தலத்தில் அமைந்துள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பூஜித்து தேவியார் வழிபட்டார். அவர்தம் அரும் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தேவியின் முன் தோன்றி, “மயிலாய் இருந்த பழி உன்னை விட்டகன்றது. கற்பகவல்லி என்பதான பெயர் உனக்காகுக’ என வரம் அருளினார். அச்சமயம் தேவியார் பரமனை நோக்கி அடியேன் இங்கு தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதி “மயிலை’ என பெயர் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பரமனும் அவ்வாறே அருளியதாக வரலாறு கூறுகிறது.

சிவநேசச் செட்டியார் என்ற அன்பரின் மகளாகிய பூம்பாவை, அரவு தீண்டி இறந்துபட, அவள் உடலை எரித்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு குடத்தில் அவரது தந்தையார் வைத்திருந்தார். அதை, அங்கெழுந்தருளிய சம்பந்தர் முன்வைக்க, அவர் “மட்டிட்ட புன்னை” என்ற பதிகம் பாடிப் பெண்ணுருவாக்கியருளினார்.

பங்குனி மாதத்தில், அறுபத்து மூவரின், திருவிழா, சிறப்பாக நடைபெறுகிறது. பங்குனித் திருவிழாவின் 8-ம் நாளில், வெள்ளி வாகனத்தில் சிவனார் திருவீதியுலா வர… அவருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களும் வாகனத்தில் பவனி வரும் அழகைக் காண சிலிர்கிறது.

இத்தல இறைவனை திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடி மகிந்துள்ளனர்.

ஆலயம் திறக்கும் நேரம்: காலை 5 முதல் 12.30 மாலை 4 முதல் 9.30

அமைவிடம்: அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை – 600 004.

Leave a Reply