shadow

காவிரி விவகார வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் முழு விவரம்

supremeகாவிரி விவகார வழக்கை நேற்று விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட், கர்நாடக அரசை கடுமையாக கண்டித்ததோடு மீண்டும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. கர்நாடக அரசை கடைசி முறையாக எச்சரிப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின் முழுவிபரங்கள் பின்வருமாறு:

காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை செப்டம்பர் 27-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே காணப்படும் முட்டுக்கட்டைக்குத் தீர்வு காணும் வகையில், உதவிடுமாறு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியின் உதவியை நீதிமன்றம் கோரியது. இதையடுத்து, மத்திய அரசு நியமிக்கும் நபர் முன்னிலையில் இரு மாநில அரசுகளின் நிர்வாகத் தலைமைகள் கூடி இந்த விவகாரத்தை விவாதிக்க கர்நாடக அரசும் தமிழக அரசும் ஒப்புக் கொண்டன. இந்த விவாதத்தை நடத்தவும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவும் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி அவகாசம் கோரினார். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முந்தைய தருணத்தில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் தினமும் வினாடிக்கு 6,000 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. அப்போது நீதிமன்றம், “அடுத்த விசாரணை செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெறும் வரை நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு எவ்விதத் தடையோ, ஆட்சேபமோ அல்லது வேறு அணுகுமுறையோ காட்டக் கூடாது’ என்று உத்தரவிட்டது.

இந்த விவகாரம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, காவிரி நீர்ப் பங்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய நீர் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை தூய்மைப்படுத்துதல் துறை அமைச்சர் முன்னிலையில் தில்லியில் செப்டம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தின் நிமிட நிரல்களை அட்டர்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

கர்நாடக்ததின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ்.நாரிமன் “காவிரி’ விவகாரத்துடன் தொடர்புடைய இரு கடிதங்களை நீதிமன்றத்தின் பார்வைக்கு வைத்தார். அதை வழக்கின் ஆவணமாக நீதிமன்றம் பதிவு செய்து கொள்வது சரியாக இருக்கும் என நீதிமன்றம் கருதுகிறது. இதில் செப்டம்பர் 29-ஆம் தேதியிட்ட கடிதத்தை ஃபாலி நாரிமனுக்கு கர்நாடக முதல்வர் (சித்தராமையா) எழுதியுள்ளார்.

(காவிரி நீர்த் திறப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள அரசுத் தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது, செப்டம்பர் 23-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது’ என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதிபலிக்கும் விதமாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தில்லியில் மத்திய அமைச்சர் உமா பாரதி தலைமையில் நடைபெற்ற இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கர்நாடக நீர் இருப்பு நிலையை விளக்கி மாநிலத்துக்கு நிபுணர் குழுவை அனுப்ப கர்நாடகம் யோசனை கூறியது, அதை தமிழகம் நிராகரித்தது. இதனால், இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தொற்றுமை எட்டப்படவில்லை. இந்த விஷயங்களை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள் என கடிதத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா விளக்கியிருந்தார்).

இந்தக் கடிதத்துக்கு மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ்.நாரிமன் செப்டம்பர் 30-ஆம் தேதி அனுப்பிய பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது: “உங்களின் செப்டம்பர் 29-ஆம் தேதியிட்ட கடிதம் கிடைத்தது. கர்நாடக அரசின் சார்பில் ஆஜராவதால் உங்கள் கடிதத்தை (அனுமதிக்கப்பட்டால்) உச்ச நீதிமன்றத்தில் படித்துக் காட்டுகிறேன். ஆனால், மாநிலத்துக்காக ஆஜராகும் நாங்கள் அனைவருமே நீதிமன்றத்தின் அலுவலர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். “தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும்’ உச்ச நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை நாம் மதிக்க வேண்டும். எனவே, உங்கள் கடிதத்தையும் எனது கடிதத்தையும் உச்ச நீதிமன்றத்தில் படிப்பது நீங்கலாக, கர்நாடகம் சார்பில் எந்தவொரு வாதத்தையும் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்க மாட்டோம் எந்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு ஃபாலி எஸ்.நாரிமன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாரிமன் எடுத்த நிலைப்பாட்டுக்காக அவரை நாங்கள் பாராட்டுகிறோம். வழக்காடுதலின் உயரிய பாரம்பரியத்தை நீதிமன்ற அலுவலர் நிலைநாட்டியுள்ளார் என்பதை தயக்கமின்றி குறிப்பிடுகிறோம்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே, “இந்த விஷயத்தில் மேற்கொண்டு வாதிட விருப்பமில்லை. இந்த நீதிமன்றம் எந்த உத்தரவைப் பிறப்பித்தாலும் அதற்கு கர்நாடக அரசு கீழ்படியப் போவதில்லை’ என்றார்.

இந்திய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம் “காவிரி மேலாண்மை வாரியம்’ அமைப்பது குறித்து செப்டம்பர் 20-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு குறித்து கேட்டதற்கு, “அக்டோபர் 4 அல்லது அதற்குள்ளாக வாரியம் அமைக்கப்படும்’ என்று கூறினார்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்துக்கான உறுப்பினர்களை சம்பந்தப்பட்ட மூன்று மாநிலங்களான கர்நாடகம், தமிழகம், கேரளம், யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகியவை முன்மொழிய வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் கூறினார்.

இதை ஏற்ற நீதிபதிகள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசம் ஆகியவை அவற்றின் உறுப்பினர்களை அக்டோபர் 1, 2016 மாலை 4 மணிக்கோ அதற்கு முன்பாகவோ முன்மொழிய வேண்டும். இது தொடர்பான தகவலை சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசத்துக்கு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகம் இன்றே (வெள்ளிக்கிழமை) அனுப்ப வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டவுடன், களத்தில் உள்ள உண்மை நிலவரத்தை அறிவதற்கு வாரியத்தின் உறுப்பினர்கள் செல்லலாம் என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்தார். இதன்படி செயல்பட வேண்டும் என உத்தரவிடுகிறேன்.

இந்தத் தருணத்தில் அரசியலமைப்பின் 144-ஆவது விதியில் குறிப்பிடப்பட்டுள்ளதை முன்வைக்க விரும்புகிறோம்.
“சிவில், நீதித் துறையில் இருப்பவர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு உதவியாக செயல்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து சிவில், நீதித் துறையில் இருப்பவர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செயல்பட வேண்டும்’ என்பது இதன் பொருள்.
இந்த விதியை படிக்கும் போதே, இந்தியாவில் உள்ள அனைவரும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி செயல்பட வேண்டும் என்பது பளிங்கு போல தெளிவாகப் புரியும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அனைவரும் கீழ்படியக் கட்டுப்பட்டவர்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அமல்படுத்த நீதிமன்றத்தின் உதவியைப் பெறலாம். ஆனால், துரதிருஷ்டவசமாக உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மீறியது. மேலும், சட்டத்தின் மாண்பை குலைக்கும் சூழ்நிலையை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது.

எங்கள் உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுவதற்கான நடைமுறைகளை நாங்கள் தொடங்கியிருக்கலாம். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் களத்தில் உள்ள உண்மை நிலவரத்தை ஆய்வு செய்து எங்களுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடுகிறோம்.
காவிரியில் இருந்து வினாடிக்கு 6,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்ற எங்களின் முந்தைய உத்தரவை மீண்டும் வலியுறுத்தி, 2016, அக்டோபர் 1 முதல் 2016, அக்டோபர் 6 வரை காவிரியில் நீரைத் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுகிறோம்.

கர்நாடக சட்டப்பேரவையின் இரு அவைகளில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் இந்த உத்தரவைப் பிறப்பித்து கர்நாடக அரசுக்கு கடைசி வாய்ப்பை வழங்குகிறோம்.

முந்தைய உத்தரவில் குறிப்பிட்டது போல, இந்திய கூட்டாட்சியின் அங்கமாக விளங்கும் கர்நாடக அரசு, எவ்வித மறுப்பையும் காட்டாமல், களத்தின் உண்மை நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வரை தற்போது பிறப்பிக்கும் உத்தரவை நிச்சயம் கடைப்பிடிக்கும் என நம்புகிறோம்.

உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றக் கூடாது என்ற பிடிவாதப் போக்குக்கு கர்நாடக அரசு வளைந்து கொண்டே இருக்கக் கூடாது. அவ்வாறு செயல்பட்டால், இறுதியில் சட்டத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை அனைவரும் அறிவர். இந்த விவகாரம் மீண்டும் 2016, அக்டோபர் 6-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply