பானாஜி: தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பத்துடன் ஒருவர் குடியுரிமை சான்றையும் இணைக்க வேண்டும் என கோவா அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விவரம் கேட்கும் நபர் தனது இந்திய குடியுரிமை சான்றையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என மாநில தகவல் அதிகாரிகளுக்கு கோவா அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்கு எதிர்கட்சியினர், ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ விஸ்வஜித் ரானே கூறுகையில், ‘‘கோவா அரசின் நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. சாதாரண மக்கள் ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதை சிரமமாக்கும் முயற்சி இது. வெளிப்படையான நிர்வாகம் நடத்துவோம் என உறுதி அளித்துதான் இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. இப்போது அரசின் சுயரூபம் தெரியவந்துள்ளது’’ என்றார். ஆர்.டி.ஐ ஆர்வலர் ஏர்ஸ் ரோட்ரிக்ஸ் கூறுகையில், ‘‘கோவா மாநிலத்தில் மட்டும்தான் ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் தேவையில்லாமல் கூடுதல் செலவு செய்ய நேரிடுகிறது. கோவா அரசின் இந்த நடவடிக்கை ஆர்.டி.ஐ சட்டத்துக்கு முரண்பாடாக உள்ளது. கோவா அரசின் இந்த உத்தரவு கொடூரமானது, சர்வாதிகாரமானது’’ என்றார்.

Leave a Reply