shadow

தானா சேர்ந்த கூட்டம்: திரைவிமர்சனம்

சூர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக உண்மையான சூப்பர் ஹிட் வெற்றிப்படம் வெளிவரவில்லை. இந்த நிலையில் முதன்முதலாக விக்னேஷ் சிவன், அனிருத்துடன் கைகோர்த்துள்ள சூர்யாவுக்கு இந்த படம் வெற்றியாக அமையுமா? என்பதை பார்ப்போம்

சிபிஐ அதிகாரியாக வேலையில் சேர்ந்து நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதும் சூர்யாவின் ஆசை. ஆனால் அனைத்து திறமைகள் இருந்தும் ஒரு பியூன் மகனுக்கு தனக்கு சரிசமமாக அதிகாரி பதவி கொடுப்பதா? என்ற எண்ணத்தில் சிபிஐ அதிகாரியான சுரேஷ்மேனன், சூர்யாவை இண்டர்வியூ செய்யும்போது அவமதித்து அனுப்பிவிடுகிறார். அரசாங்கம் கொடுக்காத சிபிஐ அதிகாரி வேலையை தானே கையில் எடுத்து கொண்டு ஊழல் பெருச்சாளிகளிடம் இருந்து பணத்தை கொள்ளையடுத்து வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவுகிறார் சூர்யா. இந்த போலி சிபிஐ கூட்டத்தை பிடிக்க அதிகாரியாக நியமனம் செய்யப்படும் கார்த்திக், சூர்யா கூட்டத்தை பிடித்தாரா? பிடித்தாலும் தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை

சிபிஐ அதிகாரி கேரக்டருக்கு சூர்யாவின் உயரம் போதவில்லை என்றாலும் முகத்தில் கம்பீரம் உள்ளது. சாதிப்பதற்கு உயரம் தேவையில்லை, உயர்வான எண்ணம் இருந்தால் போதும் என்ற வசனம் அவருக்காகவே வைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கும் சூர்யா, பில்டப் இல்லாமல் இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் தான் இந்த படத்தின் நாயகி. அதை தவிர அவருக்கு சொல்லி கொள்ளும் வகையில் காட்சி இல்லை. ஒரு பெரிய ஹீரோ படம் என்றால் ஒரு நாயகி தேவை என்ற அளவில் அவருடைய கேரக்டர் உள்ளது.

சூர்யாவின் போலி சிபிஐ கூட்டத்தில் உள்ள ரம்யாகிருஷ்ணன், செந்தில், சத்யன் உள்பட அனைவருக்கும் சிறப்பான நடிப்பு. கார்த்திக் முகத்தில் சோர்வு தெரிந்தாலும் நடிப்பில் சோர்வில்லை. சுரேஷ்மேனனை நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரையில் பார்த்தாலும் நிறைவான நடிப்பு.

சூர்யாவின் தந்தையாக நடித்திருக்கும் தம்பி ராமையா வழக்கமான மொக்க காமெடியை செய்யாமல் அடக்கி வாசித்திருப்பது சிறப்பு. செந்தில் பெட்ரோமேக்ஸ் லைட் காமெடி உள்பட அவருக்கு சிறப்பான காட்சிகள் உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி, கலையரசன் உள்பட இந்த படத்தில் பெரிய நட்சத்திர கூட்டமே இருந்தாலும் அனைவருக்கும் கச்சிதமான நடிப்பு

சிபிஐ அதிகாரி போல் ஒரு கூட்டம் தொடர்ச்சியாக ரெய்டு போலி ரெய்டு நடத்த முடியுமா? என்ற லாஜிக் இடித்தாலும், இந்த கதை நடக்கும் காலம் 80கள் என்பதால் அந்த காலகட்டத்தில் இது சாத்தியம் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஒரு படத்தில் சீரியஸ் மற்றும் நகைச்சுவை என இரண்டையும் கலந்து கொடுத்து ‘நானும் ரெளடிதான்’ படத்தில் வெற்றி பெற்ற பார்முலாவை மீண்டும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கையில் எடுத்து அதை சரியான கலவையில் கொடுத்துள்ளதால் இந்த படமும் வெற்றியடைய நிறைய வாய்ப்பு. 80களில் நடக்கும் கதையாக இருந்தால் இப்போதைய அரசியல் நிலை குறித்த வசனங்களும் இடம்பெறுகின்றன.

அனிருத்தின் இசையில் ‘சொடக்கு மேல,’ தானா சேர்ந்த கூட்டம், பீலா பீலா ஆகிய பாடல்கள் கேட்கும் வகையில் உள்ளது. அதேபோல் பின்னணி இசையிலும் அனிருத் பின்னி பெடலெடுத்துள்ளார்.

தினேஷின் கேமிராவும், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ விக்னேஷ் சிவன் -சூர்யா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்

Leave a Reply