புளியங்குடி: தமிழகத்தில் 2003ம் ஆண்டு நவம்பர் முதல் மது விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 2003க்கு முன் ஏலம் விடப்பட்ட மதுக் கடைகள் மூலம் அரசுக்கு ரூ.900 கோடி வரை கிடைத்த வருமானம், டாஸ்மாக் கடைகள் மூலம் அடுத்த நிதியாண்டிலேயே (2004-2005) ரூ.2,400 கோடியாக அதிகரித்தது. 2010ல் 14 ஆயிரத்து 500 கோடியாக உயர்ந்தது. கடந்த நிதியாண்டான 2012-13ல் டாஸ்மாக் மூலம் வருவாய் ரூ.23 ஆயிரத்து 500 கோடியாக அதிகரித்தது. இதைக்கொண்டு அரசின் இலவச திட்டங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேற்றப்பட்டு வருகின்றன.இதற்கிடையே காந்திய மக்கள் இயக்கம், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றன. முதல்வர் ஜெயலலிதாவும் இதுகுறித்து அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் டாஸ்மாக் கடைகளை பாதியாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மக்களிடையே இதற்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட தாது மணல் மற்றும் கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்தவும் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசுகையில், ‘தாதுமணல் குவாரி குறித்து முக்கிய கொள்கை முடிவை அரசு அறிவிக்கும்‘’ என்றார்.மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தினால் தனக்கு அதிக வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்ற ஜெயலலிதாவின் நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த முடிவுக்கு காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.தாதுமணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் அறிவிப்பும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் அறிவிப்பும் வரலாம் மக்களவை தேர்தலுக்கு முன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply