தெகல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால், தன்னுடன் பணியாற்றிய சக பெண் நிருபரை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கோவா மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவானார். இதை தொடர்ந்து அவரைக் கைது செய்ய பனாஜி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அனுஜா பிரபுதேசாய் வெள்ளிக்கிழமை காலை ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தார். முன்னதாக தருண் தேஜ்பால் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. வியாழக்கிழமை அந்த மனு திடீரென வாபஸ் பெறப்பட்டது.  அப்போது தேஜ்பாலின் சார்பில் வழக்கறிஞர் கீதா லூத்ரா ஆஜராகி வாதாடினார்.

பாஜக தலைவர்களின் ஊழல் விவகாரங்களை தருண் தேஜ்பால் அம்பலப்படுத்தியுள்ளார். அதற்குப் பழிவாங்கும் வகையிலேயே கோவா மாநில பாஜக அரசு சார்பில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் கூறிய பெண், சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நட்சத்திர ஓட்டலில் மிகவும் சாதாரணமாக நடந்து கொண்டுள்ளார். அவரது நடவடிக்கையில் எவ்வித அதிருப்தியோ, மாற்றமோ இல்லை என்று அவர் வாதிட்டார்.

கோவா போலீஸார் சார்பில் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணைக்கு ஆஜராகாமல் தேஜ்பால் தலைமறைவாகி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று காலை வரை தேஜ்பாலை கைது செய்ய தடைவிதித்து உத்தரவிட்டார். தேஜ்பாலின் முன்ஜாமீன் மனு குறித்து சனிக்கிழமை விசாரணை நடத்தப்பட உள்ளது. கடந்த சில நாள்களாக தலைமறைவாக இருந்த தெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் வெள்ளிக்கிழமை வெளியே வந்தார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு அவர் கோவா புறப்பட்டார். அவருடன் மனைவி கீதம் பத்ரா, மகள், சகோதரி, சகோதரர் ஆகியோரும் சென்றனர்.
டெல்லியில் இருந்து வெள்ளிக்கிழமை கோவா வந்த தருண் தேஜ்பால், பனாஜியில் உள்ள சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் ஆஜரானார். பாலியல் புகார் தொடர்பாக போலீஸார் அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். முன்னதாக கோவா விமான நிலையத்தில் தேஜ்பாலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Leave a Reply